பள்ளிக்கு அசைவ உணவு எடுத்து சென்ற சிறுவன் நீக்கம்
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஹில்டன் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் படித்து வந்த, 5 வயது சிறுவனுக்கு சமீபத்தில் தண்டனை வழங்கிய ஆசிரியர்கள், அவனை ஒரு நாள் முழுதும் வகுப்பறையின் வெளியே நிற்க வைத்துள்ளனர். இது குறித்து சிறுவன் தன் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் பள்ளி முதல்வரிடம் நேற்று முன்தினம் சென்று முறையிட்டனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிஉள்ளது. அதில், அந்த சிறுவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பள்ளி முதல்வர் முன்வைத்தார்.சிறுவனின் தாயாரிடம் அவர் கூறுகையில்,மாணவன் தினமும் அசைவ உணவு எடுத்து வருகிறான். அதை பிற மாணவர்களுக்கும் தருகிறான். இதை கண்டித்த போதும், அப்படித்தான் எடுத்து வருவேன் என்று கூறியதுடன், ஹிந்து மாணவர்கள் அனைவருக்கும் அசைவ உணவு தந்து அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவேன் என கூறினான்.இதைத் தான் அவனுக்கு நீங்கள் வீட்டில் கற்றுத் தருகிறீர்களா? இதனால் தான் அவனை நீக்கிவிட்டோம். அழைத்துச் செல்லுங்கள் என ஆவேசமாக அவர் பேசுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.இதையடுத்து, மூன்று ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய, மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.