உள்ளூர் செய்திகள்

காலாண்டு தேர்வுக்கு பொது வினாத்தாளா? கல்வி அதிகாரிகள் குழப்பம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை (செப்.,19) காலாண்டு தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பின்பற்ற வேண்டியது மாநில பொது வினாத்தாளா' அல்லது மாவட்ட வினாத்தாளா என கல்வி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.இத்தேர்வுக்கான பொது காலஅட்டவணையை கல்வி இயக்குநரகம் ஒரு வாரத்திற்கு முன் வெளியிட்டது. கடந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் பொது வினாத்தாள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு அதுபோன்ற உத்தரவு இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடக்கவுள்ள காலாண்டு தேர்வுக்கான பொது வினாத்தாள், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு இமெயிலில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆறு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த வினாத்தாளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல் இல்லை.இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பொதுவாகவே கல்வித்துறை வழிகாட்டுதல்கள், செயல்முறைகள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. கடைசி நேரத்தில் உத்தரவுகளை தெரிவித்து ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவது நாளை துவங்கவுள்ள காலாண்டு தேர்விலும் தொடர்கிறது.மாநில பொது வினாத்தாள் தான் பின்பற்றப்பட வேண்டும் என முன்கூட்டியே உத்தரவிட்டால், மாவட்டங்களில் வினாத்தாள் தயாரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இதுவரை இயக்குநரகம் இதுகுறித்து தெரிவிக்காததால் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட வினாத்தாளும் தயாரித்து ரெடியாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதை பின்பற்றுவது என குழப்பம் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களை கல்வித்துறை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு கூறினர்.தேர்வு கட்டணம் வசூலிக்க திட்டம்:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு இமெயிலில் அனுப்பப்பட்ட பொது வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பிரின்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான பொறுப்பை வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்) ஏற்றுள்ளனர். அரசு பள்ளிகளுக்கு பிரின்டர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தாண்டு ஏ4 சைஸ் பேப்பர் வழங்கப்படவில்லை. இதனால் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வினாத்தாள் பின்பற்றப்பட்டால் ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களிடமும் தேர்வு கட்டணம் வசூலிப்பு நடத்தப்படும். கல்வி இயக்குநரகம் காலாண்டு தேர்வுக்கான பொது கால அட்டவணையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தணிக்கையியல் (ஆடிட்டிங் பிராக்டிக்கல்) தேர்வு தேதிகள் விடுபட்டுள்ளதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்