தமிழ் மொழி கற்க வெளிமாநில குழந்தைகள் ஆர்வம்
வால்பாறை : வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வெளிமாநில குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ் மொழியில் கல்வி கற்கின்றனர்.வால்பாறையில் உள்ள, தேயிலை எஸ்டேட்களில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள், அசாம், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, தொழிலாளர்களை அதிகளவில் அழைத்து வந்தனர்.இவர்களின் குழந்தைகள் அந்தந்த எஸ்டேட் பகுதியில் உள்ள, அங்கன்வாடி மற்றும் அரசு துவக்கப்பள்ளிகளில் தமிழ்மொழியில் கல்வி கற்கின்றனர்.வால்பாறை மலைப்பகுதியில், 43 அங்கன்வாடி மையங்களில், 720 குழந்தைகள் படிக்கின்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிமாநில குழந்தைகள். இந்த குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் தமிழ்மொழில் கல்வி கற்றுத்தருகின்றனர். குழந்தைகளும் தமிழ்மொழியில் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர்.அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது: வால்பாறையில் புதுத்தோட்டம், நல்லகாத்து, ஸ்டேன்மோர், சிறுகுன்றா, மாணிக்கா உள்ளிட்ட எஸ்டேட் அங்கன்வாடி மையங்களில், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்கின்றனர்.அவர்களின் தாய்மொழியான ஹிந்தியிலும், சைகை வாயிலாகவும் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இது தவிர அங்கன்வாடி குழந்தைகளுக்கு, ஆடல், பாடல் வாயிலாகவும் எளிய முறையில் தமிழ் கற்றுத்தருவதால், ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். இவ்வாறு, கூறினர்.ஹிந்தி தெரியணும்!வால்பாறையில் உள்ள, 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் குழந்தைகள் அங்கன்வாடி, துவக்கபள்ளிகளில் தமிழ் மொழி வாயிலாக கல்வி கற்கின்றனர்.இவர்களை திறம்பட படிக்க வைக்க, அங்கன்வாடி பணியாளர்கள், துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் அவசியம் ஹிந்தி படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.