அதிக கட்டணம் வசூலித்தால் நிர்ணய குழுவிடம் புகார் சொல்லலாமே!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில், கணக்கில் வராத வகையில் 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவது குறித்து, கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, எந்த கணக்கிலும் வராத வகையில், 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, நம் நாளிதழில் நேற்று வெளியான செய்தி குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் கட்டணம் நிர்ணயம் செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் அண்ணா பல்கலை துணை வேந்தர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலர், மருத்துவ கல்வி இயக்குனர் அடங்கிய கட்டண நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது.இந்த குழு தான், ஆண்டுதோறும் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. அதேநேரம், விடுதி, பஸ் கட்டணத்தை, அக்கல்லுாரிகளே நிர்ணயித்து கொள்ளலாம். இந்தாண்டு மருத்துவ கல்வி கட்டணத்தை உயர்த்தும்படி, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் கோரிக்கை வைத்தன. அதை கட்டண நிர்ணய குழு நிராகரித்து விட்டது.தற்போது, 3.5 லட்சம் ரூபாய் வசூலிக்கும் செய்தி தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதிக கட்டணம் வசூலிப்பதாக இரண்டு புகார்கள் வந்துள்ளன. அவை, கட்டண நிர்ணய குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள், கட்டண நிர்ணய குழுவிடம் புகார் அளிக்கலாம். இந்த அரசு பொறுப்பேற்ற பின், மாணவர் சேர்க்கை, பணியிட மாறுதல் என, அனைத்தும் நேர்மையான முறையில் நடந்து வருகிறது.யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், புகார் தெரிவித்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.