கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் டிட்கோ
சென்னை: தொழில் நகரமான ஓசூர் இடம்பெற்றுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் முழுதும் சாலை, குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்மாவட்ட வளர்ச்சிக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில், டிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல முன்னணி நிறுவனங்களின் ஆலைகள் உள்ளன.கோவையில் மோட்டார் பம்ப், வெட் கிரைண்டர், ஜவுளி தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நகரங்களுக்கு அடுத்து, மிகப்பெரிய தொழில் நகரமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உருவெடுத்துள்ளது.இது, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு மிக அருகில் உள்ளது. ஓசூரில் ஏற்கனவே பல ஆலைகள் உள்ள நிலையில், தற்போது மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்கி வருகின்றன.மேலும், முதலீட்டை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு, 2,000 ஏக்கரில் ஓசூர் சர்வதேச விமான நிலைய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக கிருஷ்ணகிரியில் நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன.வரும் நாட்களில் கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி, குடியிருப்பு திட்டம் போன்றவையும் வளர்ச்சி அடைய உள்ளன. இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகரை நியமிக்க, டிட்கோ நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது.அதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுதும் சாலை வசதி, குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, சரக்கு முனையம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.இதுகுறித்து, டிட்கோ மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி கூறியதாவது:கிருஷ்ணகிரியில் ஓசூர் நகரம் மட்டுமின்றி; அம்மாவட்டம் முழுதும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அம்மாவட்டத்துக்கு தேவைப்படும் கூடுதல் வசதிகளை கண்டறிந்து, அதை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.புதிதாக சாலை அமைப்பது, தேசிய நெடுஞ்சாலையுடன் கூடுதல் பகுதிகளை இணைப்பது என, அனைத்து வகை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதனால், கிருஷ்ணகிரியில் புதிய வேலைவாய்ப்பு மேலும் உருவாவதுடன், அம்மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.