தேர்வு நேரத்தில் மின்தடை; மாணவ, மாணவியர் தவிப்பு
வால்பாறை: வால்பாறையில், தேர்வு நேரத்தில் மின் தடை செய்யப்படுவதால், பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர்.வால்பாறையில் உள்ள பள்ளிகளில், கடந்த வாரம் துவங்கிய அரையாண்டு தேர்வு, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், நேற்று திடீரென மின் தடை அறிவிக்கப்பட்டது. தேர்வு நேரத்தில் மின் தடை செய்யப்பட்டதால், மாணவ, மாணவியர் இருட்டில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பகல் நேரத்திலேயே சரியான வெளிச்சம் கிடைப்பதில்லை. இந்நிலையில், மின் தடையால் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் இருளில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டியுள்ளது.மின் தடையால் மாணவர்கள் வினாத்தாள்களில் கேட்கப்படும் கேள்விகளை கூட படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி தேர்வு நேரங்களில், மின் தடை செய்வதை மின்வாரிய அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.