உள்ளூர் செய்திகள்

போதை வியாபாரிகளாக மாறி விட்ட மாணவர்கள்; திணறுகிறது போலீஸ்

கோவை: போதைப்பொருட்களின் முக்கிய கேந்திரமாக, கோவை மாறி வருகிறது. இதில் லேட்டஸ்ட் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், வெளிமாவட்ட ஏழை கல்லுாரி மாணவர்கள் பலருக்கு, இங்குள்ள கல்லுாரிகளில் அட்மிஷன் வாங்கிக்கொடுத்து, அவர்களை போதைப்பொருள் விற்பவராக, ஏஜென்டுகள் மாற்றியுள்ளனர் என்பதுதான்!போதையில்லா தமிழகம் என்கிற முழக்கத்தை, தமிழக அரசு முன்னெடுத்து ஊரெல்லாம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், இன்றைய தினம் போதைப்பழக்கம் என்பது மதுபானங்கள் மட்டுமின்றி, கஞ்சா, போதை மாத்திரை, மெத்தபெட்டமைன், போதை ஸ்டாம்ப், போதை காளான் என, போதைப்பொருட்களின் பரிமாணங்கள் பல்வேறு வடிவங்களில் மாறியிருக்கின்றன.இதில், போதைப்பொருட்களின் முக்கிய கேந்திரமாக, கோவை மாறி வருகிறது. அதில், கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியரே, போதைப்பொருட்கள் விற்கும் கும்பலின் டார்க்கெட்டாக இருக்கிறது.ஏனெனில், கோவையைச் சுற்றிலும் கலை அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவம் என, 200க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இருக்கின்றன. இவற்றில் படிக்கும் மாணவ - மாணவியரை கணக்கிட்டால், இரண்டு லட்சத்தை தாண்டுகிறது. பல கல்லுாரிகள் ரேங்க் பெற்றுள்ள நிறுவனங்களாக இருப்பதால், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும், மாணவர்கள் கோவைக்கு வந்து கல்வி பயில்கின்றனர்.ஏஜன்ட்டுகள் நியமனம்கல்லுாரி மாணவ - மாணவியரை போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்க, கல்லுாரிகளுக்கு உள்ளேயே, ஏஜன்ட்டுகள் நியமிக்கப்படுகின்றனர். சீனியர் மாணவர்களான இவர்கள், சக மாணவர்களுடன் சகஜமாக பேச்சுக் கொடுத்து, பிரண்ட்ஷிப் உருவாக்கி, போதைப்பழக்கத்தை திணிக்கின்றனர். நாளடைவில் அவர்கள் மூலமாகவே போதைப்பொருட்களை கைமாற்றுகின்றனர். சீனியர் மாணவர்கள் மூலமாக ஜூனியர்களுக்கு, போதைப்பொருட்கள் செல்வதால், அவற்றை தடுக்க முடியாமல், போலீசார் தடுமாறுகின்றனர்.ஏனெனில், சமீபகாலமாக, தென்மாவட்டங்களில் இருந்து கல்லுாரி படிப்புக்காக வரும் மாணவர்களில் சிலர், படிப்பு முடிந்ததும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதில்லை. மாணவர்கள் என்ற போர்வையில், ரூம் எடுத்து தங்கியிருந்து, கஞ்சா சேல்ஸ் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். போலீசில் சிக்காமல் இருக்க, தற்போது கல்லுாரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு, பணம் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, சப்ளை செய்ய பயன்படுத்துகின்றனர்.மிஷன் கல்லுாரிஇதை தடுக்க, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் சார்பில், மிஷன் கல்லுாரி என்கிற திட்டம் துவக்கப்பட்டது. போதைப்பொருட்கள் இல்லா கோவை என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இருப்பினும், போதைப்பொருட்கள் புழக்கம், பயன்பாடு குறையவில்லை.புறநகர் பகுதியில் இருந்து நகரத்துக்குள், போதைப்பொருட்கள் நுழைவதாக உளவுப்பிரிவு போலீசார் கருதினர். அதைத்தொடர்ந்து, புறநகர் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. தொண்டாமுத்துார், கருமத்தம்பட்டி, மதுக்கரை மற்றும் அன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில், போலீசார் கூட்டாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாநகர பகுதியிலும், புறநகர் பகுதியிலும் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில், போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த மூன்று மாதங்களில், கோவை மாநகர பகுதிகளில், 10 முறை மாணவர்கள் அறைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், 4 கிலோ கஞ்சா, 110 போதை மாத்திரைகள், ஆறு எல்.எஸ்.டி., போதை 'ஸ்டாம்ப்' மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த, ஏழு கல்லுாரி மாணவர்கள் உட்பட, 19 பேர் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் பகீர் தகவல்கஞ்சா வழக்கில் கல்லுாரி மாணவர்கள் சிக்கியதால், போலீஸ் உயரதிகாரிகள் பேரதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில், தமிழக அரசையே உலுக்கும் வகையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.அதாவது, கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்காகவே, தென்மாவட்டங்களைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு செய்து, கோவைக்கு அழைத்து வருகின்றனர். இங்கு தங்க வைத்து அவர்களை மூளைச்சலவை செய்து, கல்லுாரிகளில் அட்மிஷன் போடுகின்றனர். படிப்புச்செலவு, அறை வாடகை, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கஞ்சா சப்ளை செய்யும் கும்பலே செய்து தருவதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.இதைத்தொடர்ந்து, கல்லுாரிகளில் நடக்கும் சம்பவங்களை உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கல்லுாரிகள் சிலவற்றில், போதைப்பொருட்கள் புழக்கம், சர்வசாதாரணமாக இருப்பதை அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகங்களுக்கு, தகவல் தெரிவித்திருக்கின்றனர்.நிர்வாகத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்செட் ஆன போலீசார், இப்போது, தமிழக உயர்கல்வித்துறையின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். உயர்கல்வித்துறையில் இருந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இருப்பதால் போலீசார் நொந்து போயிருக்கின்றனர்.ஹவுஸ் ஓனர்களுக்கு வார்னிங்கல்லுாரி நிர்வாகங்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை; பெற்றோர் தரப்பில் அக்கறையின்மை போன்ற காரணங்கள் அணிவகுத்து நிற்கும் அதே சமயத்தில், மாணவர்களை போதை கலாசாரத்தில் இருந்து மீட்க வேண்டிய நெருக்கடியில், போலீசார் இருக்கின்றனர். அதனால், வாடகைக்கு வீடு கொடுக்கும் உரிமையாளர்கள் பக்கம், தங்களது பார்வையை திருப்பியிருக்கின்றனர்.கல்லுாரி மாணவர்களுக்கு வாடகைக்கு அறை கொடுப்பதற்கு முன், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்; பெற்றோரை அழைத்துப் பேச வேண்டும். அவர்களுடன் யார், யார் தங்கியிருக்கிறார்கள் என்கிற விபரம் குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். அவர்களை சந்திக்க வரும் வெளிநபர்கள் யார் என்பதை அறிந்திருக்க வேண்டும். விடுதி வளாகத்தில், 'சிசி டிவி' கேமரா பொருத்தியிருக்க வேண்டும். பணத்துக்கு ஆசைப்பட்டு வாடகைக்கு அறை கொடுக்கக் கூடாது; இவற்றை மீறினால் வீட்டு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என, போலீஸ் ஸ்டைலில் 'வார்னிங்' கொடுக்கப்பட்டிருக்கிறது.சமுதாயம் சார்ந்த இப்பிரச்னைக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள், சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது, இன்றைய அவசிய தேவை. இல்லையெனில், போதையின் பின்னால் செல்லும் இளைய சமுதாயத்தை, மீட்பது மிகப்பெரிய சவாலாகி விடும்.கல்லுாரிகளின் நிர்வாகம் மீது வழக்குகள் பதிய போகிறோம்கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கஞ்சா விற்பனை செய்யும் நபரை கண்டறிவது எளிதாக இருந்தது. தற்போது, கஞ்சா விற்பனை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பதே சிரமமாகி விட்டது. கல்லுாரி மாணவர்கள் பலர் போதைப்பொருட்கள் விற்கின்றனர். கல்லுாரிகளுக்குள்ளும் மற்றும் விடுதிகளிலும் சப்ளை செய்வதால், அவர்களை கண்டறிவது சிரமமாக உள்ளது. நாங்கள் நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்புகிறோம். ஜாமினில் வெளிவந்து, கல்லுாரிகளுக்குச் சென்று, மீண்டும் அதே வேலையை செய்கின்றனர்.போலீசாரின் நடவடிக்கைக்கு கல்லுாரி நிர்வாகத்தினர் ஒத்துழைக்க வேண்டும். வெளியே அறை எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்தால், போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய மாணவர்களை, கல்லுாரியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆனால், கல்லுாரி நிர்வாகத்தினர் அபராதம் மட்டும் வசூலித்து விட்டு, தேர்வு எழுத அனுமதிக்கின்றனர். மாநகரில் உள்ள சில கல்லுாரிகளில், இதுபோன்று தொடர்ந்து நடைபெறுகிறது. போலீசார் அறிவுறுத்திய பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கல்லுாரி நிர்வாகத்தினர் மீதும், வழக்கு பதிய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கைகோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் கூறியதாவது: வெளிமாவட்டங்களில், குறிப்பாக ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவைக்கு படிக்க வரும் மாணவர்கள், அங்கு கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து, இங்குள்ள மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். பணத்துக்காக அவர்களிடம் கஞ்சாவை கொடுத்து, கல்லுாரியில் சப்ளை செய்யவும் துாண்டுகின்றனர்.வெளிமாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள், கோவைக்கு வந்து மாணவர்களுடன் அறைகளில் தங்குகின்றனர். அவர்கள் வாயிலாகவும், மாணவர்களுக்கு கஞ்சா வந்தடைகிறது.மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், மாவட்ட போலீஸ் சார்பில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை நடத்திய மூன்று சோதனைகளில், 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா வழக்கில் கைதாகும் நபர்கள் மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கஞ்சா சப்ளையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதால், போதை மாத்திரை, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட சிந்தடிக் போதை பொருட்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவற்றையும் கண்காணித்து வருகிறோம்.சில வாரங்களுக்கு முன், தொண்டாமுத்துார் பகுதியில் மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லுாரிகளில், ஆன்டி டிரக் கமிட்டியை வலுப்படுத்த இருக்கிறோம்; இதன் மூலம் வருங்காலங்களில் போதைப்பொருள் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்காகவே, தென்மாவட்டங்களைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு செய்து, கோவைக்கு அழைத்து வருகின்றனர். இங்கு தங்க வைத்து அவர்களை மூளைச்சலவை செய்து, கல்லுாரிகளில் அட்மிஷன் போடுகின்றனர். படிப்புச்செலவு, அறை வாடகை, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கஞ்சா சப்ளை செய்யும் கும்பலே செய்து தருவதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.வாழ்க்கை போச்சு!வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு பணத்தாசை, ஆடம்பர வாழ்க்கையை காட்டி கஞ்சா விற்பனை செய்ய அழைக்கின்றனர். அம்மாணவர்களையும் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுக்கின்றனர். இதில், சிக்கிக்கொள்ளும் மாணவர்கள், நாளடைவில் வேறு வழியின்றி, போதைக்கும்பலுடன் இணைந்து தொடர்கின்றனர். இப்படி தான் பெரும்பாலானோர், சிக்கிக்கொள்கின்றனர். கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்து போலீசார் பிடித்தால், அவர்களது எதிர்காலம் வீணாகும். இவ்வழக்கில் சிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பின், அரசு துறைகளில் பணியாற்ற முடியாது; தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு கிடைக்காது. வெளிநாடுகள் செல்ல பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளில் சிக்கல் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்