பள்ளிகளில் திரைப்பட போட்டி ஆர்வம் காட்டாத ஆசிரியர்கள்
சென்னை: அரசு பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான திரைப்படப் போட்டி, நாளை மறுநாள் துவங்கும் நிலையில், மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வம் காட்டவில்லை.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பல்துறை திறமைகளை அறியும் வகையில், பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், முக்கிய தலைப்புகளில் அமைந்த சிறார் குறும்படம் திரையிடப்பட்டு, அதுகுறித்த புரிதல் ஏற்படுத்தப்படுகிறது.இந்நிலையில், மாணவர்களிடம் திரைப்படம் உருவாக்கும் திறமையை ஊக்குவிக்கும் வகையில், நடித்தல், கதை எழுதுதல், போஸ்டர் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, இந்தாண்டுக்கான போட்டிகள் குறித்த அறிவிப்பை, நேற்று முன்தினம் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.அதில், 'வட்டார அளவில், அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் வகையில் போட்டிகளை நடத்தி, அதில் தேர்வாகும் மாணவர்களை, மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும்.போட்டியின் விபரங்களை, முதல் நாளில் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.அதன்படி, பங்கேற்போரின் விபரங்களை, எமிஸ் தளத்தில் இன்று பதிவேற்றி, 7ம் தேதி பள்ளி அளவிலான போட்டிகளை நடத்தி, 10ம் தேதி வெற்றியாளர் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.அடுத்து, 13ம் தேதி வட்டார போட்டிகளை நடத்தி, மறுநாள் வெற்றியாளர் விபரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும், மாவட்ட போட்டிகளை 20ம் தேதி நடத்தி, 21ம் தேதி வெற்றியாளர் விபரம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நடக்கின்றன. மேலும், பள்ளி ஆண்டு விழாக்களும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மாணவர்களை படிப்பிலிருந்து திசை திருப்பவோ, போட்டிகளை நடத்தவோ ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாததால், மாணவர்கள் சுணங்கி உள்ளனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை, ஜூன் மாதத்தில் இருந்தே படிப்படியாக நடத்தினால் தான், அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க முடியும்.மார்ச் மாதத்தில், நிதியாண்டு முடியும் நிலையில், பிப்ரவரியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது, பள்ளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இம்சையாகவே உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.