சென்னையில் அடுத்த மாதம் மருத்துவ சுற்றுலா மாநாடு
கோவை: கோவையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவ சுற்றுலா மாநாடு, ஏப்ரலில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார சேவைகளுக்காக, வேறு நாடுகளுக்கு செல்லும் பயணம், 'மருத்துவ சுற்றுலா' என்று அழைக்கப்படுகிறது. இது, உலகளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. நாட்டிலேயே மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது.15 லட்சம்இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.தமிழகத்தில், ஆரோக்கிய சுற்றுலாவை பிரபலப்படுத்தும் பிரிவுகளில் பணிபுரியும் சுற்றுலா நிறுவனங்கள், பயண முகமைகள், மருத்துவ சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகள், ஆரோக்கிய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா மாநாடு கோவையில், ஒரு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என, 2024 - 25ம் ஆண்டுக்கான சுற்றுலா துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்திருந்தார்.தீர்மானம்கோவையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டன. தவிர, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், ஜனவரி மாதம் மருத்துவ சுற்றுலா மாநாடு குறித்த முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், கோவையில் நடத்தப்படாமல், சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில், இரு நாட்கள் மருத்துவ சுற்றுலா மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்க உள்ளனர்.முதல் நாள், இதற்கான அரங்குகளில், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை, வசதிகள், காப்பீடு குறித்த விபரங்கள், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இரண்டாவது நாள், கோவையில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும், பங்கேற்பாளர்களை அழைத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் நடத்தி, பங்கேற்பாளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால், சென்னையில் மட்டும் மருத்துவ சுற்றுலா மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.