உலகின் தேவைகளை பிரதிபலிக்கும் பாடத்திட்டம் அவசியம்; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: உலகின் தேவையறிந்து புதிய பாடத்திட்டங்களை வகுப்பதுடன், மாணவர்களிடையே பல்துறை கற்றலையும் உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மாறி வருகிறதுதமிழகத்தில் உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக, அனைத்து பல்கலைகளின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:அறிவியல் தொழில்நுட்பங்களில் உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு, நம் பல்கலைகள் செயல்பட வேண்டும்.சிறந்த முன்னெடுப்புகள், உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான ஆலோசனைகளை, உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.நாம் உருவாக்கக்கூடிய மாற்றங்கள், மாணவர்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுத்தவில்லை என்றால், மாணவர்கள் பின்தங்கி விடக்கூடும்.அதனால், பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை போன்றவற்றை, நாம் சிந்திக்க வேண்டும்.பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறி வருகிறது. ஏ.ஐ., கிரீன் எனர்ஜி, இண்டஸ்ர்டி 4.0 இவையெல்லாம் பொருளாதாரங்களை முடிவு செய்கின்றன. வளரும் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்களை பல்கலைகள் உருவாக்க வேண்டும்.டேட்டா சயின்ஸ், ரினுவபுள் எனர்ஜி மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.நவீன திறன்இதன் வாயிலாக, கல்வியறிவை நவீன திறன்களோடு இணைத்து, நம்முடைய மாணவர்களை பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், கண்டுபிடிப்பாளராக, தீர்வு அளிப்பவராக உருவாக்க வேண்டும். உலகின் தேவைகளை பிரதிபலிக்கும் பாடப்பிரிவுகளை வடிவமைத்து, பல்துறை கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.நான் முதல்வர் திட்டம் வாயிலாக, 27 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. உலகளாவிய வேலைவாய்ப்புகளில் நம் மாணவர்கள் போட்டி போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள், முதல் பட்டதாரிகள், விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவான, இன்க்ளூசிவ் கேம்பஸ் என்ற உள்வளாக நேர்காணல்களை, பல்கலைகளில் நடத்த வேண்டும். மருத்துவ சுற்றுலாவில், தமிழகம் சிறந்து விளங்குவது போல், மருத்துவ கல்வி கற்கவும் உலகளவிலான மாணவர்கள் தமிழகம் வர வேண்டும்.அதற்காக ஆராய்ச்சி, புதுமைக்கான மையங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்க வேண்டும். இந்த ஆட்சி, உயர் கல்வி மற்றும் புத்தாக்க ஆராய்ச்சிக்கான பொற்காலமாக பேசப்பட வேண்டும்.பங்களிக்க தயார்தமிழகத்தை சேர்ந்த பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், உலகளவில் பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்புகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.அவர்கள், தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டவும், அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தயாராக உள்ளனர். அவர்களது திறமையையும், அறிவையும் பயன்படுத்தி கொள்ள, தமிழ் டேலன்ட்ஸ் பிளான் திட்டத்தை வகுக்க வேண்டும். அதன் வாயிலாக, தமிழக கல்வி நிலையங்கள், ஆராய்ச்சிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.மேலும், அமெரிக்கா அதிபர் எடுத்து வரும் நடவடிக்கையால், அந்நாட்டில் பணியாற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் தமிழகத்திற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. அவர்களின் திறமையையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணி, உயர் கல்வி அமைப்புகளில் உலக தரத்தை கொண்டு வர ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும்.கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துக்கள் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிடக்கூடாது.பிரிவினையை துாண்டும் கருத்துக்களுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இவற்றில் எவ்வித சமரசமும் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.