உள்ளூர் செய்திகள்

ஆதி திராவிடர் நல பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

சென்னை : தினமலர் செய்தியை தொடர்ந்து, ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் 1,138 பள்ளிகளில், 1,177 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறையால், இப்பள்ளிகளில் நான்கு ஆண்டுகளில், 20 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த, 24ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை, தொகுப்பூதிய முறையில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டங்களில் செயல்படும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, தொகுப்பூதிய முறையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பதவி உயர்வு வாயிலாக பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் 18,000; பட்டதாரி ஆசிரியருக்கு 15,000; இடைநிலை ஆசிரியருக்கு 12,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்