உள்ளூர் செய்திகள்

நாய் அசுத்தம் செய்த உணவை மாணவர்களுக்கு பரிமாறிய அவலம்

பிலாஸ்பூர்: பள்ளி மாணவர்களுக்கு, நாய் அசுத்தம் செய்த உணவை பரிமாறிய அவலம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்குமாறு, அம்மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பலோடாபஜார் படாபரா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில், நாய் அசுத்தம் செய்த உணவை, மாணவர்களுக்கு வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.இதையடுத்து, அரசு சார்பாக அளித்த அறிக்கையில், 'அந்த மாவட்டத்தின் லச்சன்பூர் கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்ளியில், கடந்த ஜூலை 28ல் இந்த சம்பவம் நடந்தது. மதிய உணவு திட்டத்தின் கீழ், சுயஉதவி குழு ஒன்று, இந்த உணவை வழங்கியது. இந்த விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர், உணவு ஒருங்கிணைப்பாளர், விநியோக ஆசிரியர்கள் உள்ளிட்டோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்' என கூறப்பட்டது.இது போல, மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி அளித்த அறிக்கையில், 'அசுத்தமான உணவை, பள்ளியில் படிக்கும் 84 மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆக., 8ல், மூன்று தவணை, 'ரேபிஸ் தடுப்பூசி' செலுத்தப்பட்டது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது' என, தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், 'பாதிக்கப்பட்ட மாணவர்கள் 84 பேருக்கு, மூன்று தவணை ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு மாதத்துக்குள் தலா 25,000 ரூபாயை, நிவாரணமாக மாநில அரசு வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில், இனி மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் அரசு இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்