உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி சிறார்களுக்கு உதவும் தனியார் பள்ளி ஆசிரியைகள்

மங்களூரு: பல தொழில்கள் இருந்தாலும், ஆசிரியர் தொழிலுக்கு தனிப்பட்ட மகத்துவம் உள்ளது. புனிதமான பணியாக கருதப்படுகிறது. சிலர் ஆசிரியர் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர்.அரசு பள்ளிகளில் கல்வி தரமாக இருப்பது இல்லை. இப்பள்ளியில் கல்வி கற்கும் சிறார்களுக்கு, கல்வித்திறன் குறைவாக இருக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதற்கு தீர்வு காண, தனியார் ஆசிரியை குழுவினர் முன் வந்துள்ளனர்.மங்களூரில் வசிப்பவர்கள் லட்சுமி, ஆஷா பிரியா, ஹவ்யா, சுஜாதா. இவர்கள் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகின்றனர். தனியார் பள்ளி அலுவலக ஊழியரா பணியாற்றுபவர் சவும்யா. இவர்கள் கல்விச்சேவை செய்வதில், ஆர்வம் உள்ளவர்கள். ஐந்து பேரும் இணைந்து, குழு அமைத்துள்ளனர். இவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தனியார் பள்ளிகளில் பணியாற்றினாலும், மாதந்தோறும் நான்காவது சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர். அவர்களை விளையாட வைக்கின்றனர். அது மட்டுமின்றி, அவர்களின் கல்விக்கு தேவையான பொருட்களை வாங்கி தருகின்றனர். இதன் மூலம் அரசு பள்ளி சிறார்களை, கல்வியில் ஊக்கப்படுத்துகின்றனர்.மங்களூரு நகர் மட்டுமின்றி, மற்ற நகரங்களுக்கும் சென்று அரசு பள்ளிகளின் சிறார்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக, பண்ட்வாலின், கத்தலிகே தொடக்கப்பள்ளி, பெலதங்கடி தாலுகாவின், பெரியட்டா அரசு தொடக்க பள்ளிகளில், விளையாட்டுகள், நடனம், உடற்பயிற்சி கற்றுத் தருவதுடன், பாடங்களும் கற்பிக்கின்றனர். கல்வி மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக இவர்கள் எந்த பணமும் வாங்குவது இல்லை. இலவசமாக சேவை செய்கின்றனர்.ஆசிரியை குழுவினரின் சேவையை கவனித்து, மேலும் பல பள்ளிகளில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. தங்களின் பள்ளிகளிலும் இத்தகைய கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் சிறார்களின் நலனுக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என்பது, ஆசிரியைகளின் ஆசையாகும். ஆனால் ஐந்து பேரும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாணவர்களுக்கு உதவும் அளவுக்கு, பொருளாதார வசதி இல்லை. தங்களிடம் இருக்கும் சொத்து, கல்வி அறிவு மட்டுமே. இதை மற்றவருக்கு பகிர்ந்தளிக்க முன் வந்துள்ளனர்.இன்றைய காலத்தில், தாங்கள் பணியாற்றும் பள்ளியில், மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு மனதுடன், பாடம் நடத்தும் ஆசிரியர்களை பார்ப்பது அபூர்வம். சிறிய காரணங்களை காட்டி, மாணவர்களை அடித்து நொறுக்கும் ஆசிரியர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில், லட்சுமி, ஆஷா பிரியா, ஹவ்யா, சுஜாதா, சவும்யாவின் சேவை பாராட்டத்தக்கது. இவர்கள், ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்