பணியிடை பயிற்சிகளுக்கு எழுத்துப்பூர்வ ஆணைகள் தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர்:தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் போன்ற பணியிடை பயிற்சிகளுக்கு தொடக்கக் கல்வித் துறையில் இருந்து எழுத்துப்பூர்வ ஆணைகளை வாட்ஸ்ஆப் மூலம் வழங்குவதை தவிர்த்து எழுத்தப்பூர்வமாக வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சிகள் வழங்கப்படும். அவர்களின் திறன்கள், கற்பித்தல் செயல்பாடுகள், சமீபத்திய நிகழ்வுகளை அறிந்து அதை மேம்படுத்த இதுபோன்ற பயிற்சிகள் அவ்வப்போது அளிப்பதுண்டு. தற்போது எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களில் அதிகளவில் ஆசிரியர்கள் பணியிடை பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.இத்தகைய பணியிடை பயிற்சிகளுக்கு வழக்கமாக எழுத்துப்பூர்வமான ஆணைகள் வழங்கப்படும். தற்போது மெயில் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள எல்லா பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து மெயில் ஐ.டி.,க்கள் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் எழுத்துப்பூர்வ ஆணைகளை தபால் மூலமாகவோ அல்லது மெயிலிலோ அளிக்க வேண்டும். அதை விடுத்து வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் தெரிவித்து வர அறிவுறுத்துகின்றனர்.இதனால் பணி நேரத்தின் போது ஆசிரியர்களை வெளியில் அனுப்ப தலைமை ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். வெளியில் அனுப்பப்படுபவருக்கு ஏதேனும் பிரச்சனை, விபத்து ஏற்பட்டால் எழுத்து பூர்வ கடிதம் இல்லாத பட்சத்தில் நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இந்த நடைமுறை தெளிவாக பின்பற்றப்படுகிறது.மெயிலிலோ, தபாலிலோ அனுப்பி விடுகின்றனர். தொடக்கல்வித்துறையில் தான் அலட்சியம் தொடர்கிறது. எனவே எழுத்துப்பூர்வ ஆணைகளை வழங்கி ஆசிரியர்களை பணியிடை பயிற்சிக்கு அழைக்க வேண்டும், குறைந்தபட்சம் மெயில் நடைமுறையாவது பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.