ஆன்லைனில் போட்டி தேர்வு பயிற்சி: அரசு முயற்சிக்கு வரவேற்பு
சென்னை: 'ஆன்லைன்' வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும், தமிழக அரசின் முயற்சிக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், அரசு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.மத்திய, மாநில அரசின் பணிகளுக்கு, தேர்வாணையங்கள் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றுக்கு பயிற்சி அளிக்க, மாநிலம் முழுதும், ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் இயங்குகின்றன.இம்மையங்களில், ஆயிரங்களில் துவங்கி லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு பலரும் பயிற்சி பெற்று வருகின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில், போட்டித் தேர்வு மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.இதற்கு அதிக அளவில் செலவாகு ம் என்பதால், 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிக்கும் பணியை, தமிழக அரசு துவக்கி உள்ளது. இதற்கென வேலை வாய்ப்பு துறை, அண்ணா நிர்வாக பணியாளர் பயிற்சி மையம் வாயிலாக, 'யு டியூப் சேனல்' மற்றும் மொபைல்போன் செயலி துவக்கப்பட்டு உள்ளது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.எனவே, 'ஆன்லைன்' வாயிலாக, பயிற்சி அளிக்கும் பணியை தொடர்ந்து செயல்படுத்த, அரசு ஒரு கோடி ரூபாயை, மனிதவள மேலாண்மை துறைக்கு கூடுதலாக வழங்கியுள்ளது.இதுகுறித்து, மனிதவள மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி வாயிலாக துவக்கப்பட்டுள்ள, 'யு டியூப் சேனலுக்கு' இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது. இதன் வாயிலாக, தேர்வு நடப்பதற்கு முன், தொடர்ந்து 15 நாட்களுக்கு மாணவர்களிடம், 'ஆன்லைனில்' கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்படுகின்றன. மேலும், 60 நாட்களில், தேர்வுகள் தொடர்பான 2,694 வீடியோக்கள் பதிவே ற்றம் செய்யப்பட்டு உள்ளன.இந்த சேனலை, 5.06 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். வெளியிடப்பட்ட வீடியோ பதிவுகளை, 5.77 கோடி பேர் வரை பார்வையிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.