உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு இனி எஸ்.ஐ.ஆர்., பணி கட்டாயம்

மதுரை: 'மதுரை நகரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகளில் இனி மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும்' என கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். தற்போது 2ம் இடைப்பருவத் தேர்வு, அடுத்த மாதம் அரையாண்டு தேர்வு நடக்கும் சூழலில் இப்பணி கட்டாயம் என்பதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.பல்வேறு குழப்பங்களுடன் குறைந்த காலத்திற்குள், குறைவான பணியாளர்களுடன் எஸ்.ஐ.ஆர்., பணியை முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால் பி.எல்.ஓ.,க்களுக்கு பெரும் சவாலாகி வருகிறது.மதுரையில் எஸ்.ஐ.ஆர்., பணி மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால் நள்ளிரவு வரை கண்காணிப்பாளர்கள், பி.எல்.ஓ.,க்கள் எஸ்.ஐ.ஆருடன் மல்லுக்கட்டுகின்றனர். இந்நிலையில் மாநகாட்சி கல்வி அலுவலர் மோகன் நேற்று ஓர் ஆடியோ உத்தரவு பிறப்பித்தார். அதில் 'கலெக்டர் உத்தரவுப்படி பி.எல்.ஓ.,க்களுடன் இணைந்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பி.எல்.ஓ.,க்கள் தரும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்.எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை பி.எல்.ஓ.,க்கள் பயிற்சி அளிப்பர். அவர்கள் தரும் விண்ணப்பங்களை பள்ளியிலேயே இருந்து பதிவேற்றம் செய்து கொடுக்க வேண்டும். இப்பணியை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.ஐ.டி.கே., பயிற்றுநரை பயன்படுத்தலாம் ஆசிரியர்கள் கூறியதாவது: குறைவான எண்ணிக்கையில் பணியாளர்களை ஈடுபடுத்தி எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள செய்வதன் மூலம் அனைத்து தரப்பினரும் தேர்தல் கமிஷன் மீது அதிருப்தியில் உள்ளனர். நேற்று (நவ.17) இரண்டாம் இடைப்பருவ தேர்வு துவங்கியுள்ளது. டிச.15ல் அரையாண்டு தேர்வு துவங்கவுள்ளது. அதற்காக மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதற்கிடையே வழக்கமான 'எமிஸ்' பணிகள், மாணவர்களின் ஆதார் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளால் ஏற்கனவே ஆசிரியர்கள் பணிச்சுமையில் தவிக்கின்றனர்.இதற்கிடையே எஸ்.ஐ.ஆர்., பணி கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் (ஐ.டி.கே.,) 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். இதுபோன்ற பணிகளுக்கு அவர்களை அழைத்தால் விருப்பமுடன் வருவர். அதை தவிர்த்து கற்பித்தல் பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம். அவ்வாறு கட்டாயப்படுத்தினால் தேர்ச்சி பாதிப்பு குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்ப கூடாது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்