பள்ளி மாறி சென்ற குழந்தையை மீட்டு ஒப்படைத்த போலீசார்
மேடவாக்கம்: மேடவாக்கம், பாபு நகர், இந்திராகுமாரி தெருவில் இயங்கும் தனியார் பள்ளி வளாகத்தில், நேற்று காலை, இரண்டரை வயது பெண் குழந்தை தனியாக நின்றிருந்தது. இதை பார்த்த பள்ளி நிர்வாக அதிகாரி ஹேமந்த், 30, அந்த குழந்தையிடம் விசாரித்தார். அதில், குழந்தை அப்பள்ளியில் படிக்கவில்லை என்பது தெரிந்தது.அதனால், அவர் மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பள்ளிக்கு வந்த போலீசார், குழந்தை யாருடையது என அறிய, அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு குழந்தையை அழைத்துச் சென்று விசாரித்தனர்.அதில், அந்த குழந்தை அந்த பள்ளியில் பிரீ.கே.ஜி., படித்து வருவதும், குழந்தையின் வீடு மேடவாக்கம் பகுதியில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் பாட்டி வசந்தாவை, பள்ளிக்கு வரவழைத்த போலீசார், குழந்தை பள்ளி மாறி சென்றது குறித்து விசாரித்தனர்.அப்போது, வீட்டிற்கு வந்திருந்த சிறுவனிடம், குழந்தை படிக்கும் பள்ளியில் விட்டுவிடுமாறு கூறி அனுப்பி வைத்ததாகவும், ஆனால் சிறுவன் பள்ளி மாற்றி விட்டுச் சென்றுள்ளதாகவும், குழந்தையின் பாட்டி கூறியுள்ளார்.இதையடுத்து, பாட்டிக்கு அறிவுரை கூறி, குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர்.