உள்ளூர் செய்திகள்

காத்திருக்காதீர்; வாய்ப்புகளைத் தேடுங்கள் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை

திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி தலைவர் கோவிந்தராஜூ, டீன் சம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் ராதாமணி வரவேற்றார்.2021 - 24ம் ஆண்டில் படித்த, இளங்கலை மாணவ, மாணவியர் 284 பேர்; முதுகலையில் 28 பேர் என, 312 பேருக்கு பட்டம் அளிக்கப்பட்டது.இளங்கலை மாணவர்கள் நிகாஷ்கண்ணா, கவிதா, சக்தி தர்னீஷ், காயத்ரி, முதுகலை மாணவி மோனிகா ஆகியோர் பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றதற்கான தங்க பதக்கம் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி, கிராஸிம் நிறுவன பிர்லா செல்லுலோஸ் சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக மேம்பாட்டு தலைவர் முருகன் தென்கொண்டார் பேசியதாவது:மாணவர்கள் அனைவரிடமும் திறமை உள்ளது. திறமையை வெளிப்படுத்தும் உத்வேக மனநிலையுடன் தொடர்ந்து உழைத்தால், நிச்சயம் வாழ்வில் சிறந்த நிலையை அடையலாம். மனிதனின் அறிவாற்றலுக்கு எல்லையே கிடையாது. நம்மால், அனைத்து துறைகளிலும் புதுமைகளை கண்டறிந்து புகுத்த முடியும்.எனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலைதான், நம்மை பின்னோக்கி தள்ளுகிறது. நவீன தொழில்நுட்பங்களை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் மன பக்குவம் நம்மிடம் வளர வேண்டும்.திறமைகளை வெளிப்படுத்த தெரிந்திருக்கவேண்டும். படிப்பு முடித்து, வாழ்வில் உயர் நிலையை அடையும்போது, உங்களை செதுக்கிய ஆசிரியர்களை சந்தித்து, அவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். எந்த செயலையும் முன்னரே திட்டமிட்டு, திறம்பட மேற்கொள்ளவேண்டும்; அவசர கதியில் செயல்படுவது தவறு. வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருக்க கூடாது; வாய்ப்புகளை தேடிச் செல்லவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிப்ட்-டீ கல்லுாரி துணை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, இணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.கிராஸிம் நிறுவன பிர்லா செல்லுலோஸ் சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக மேம்பாட்டு தலைவர் முருகன் தென்கொண்டார் கூறுகையில், ஆடை உற்பத்தியில் சாதிக்க செய்ய வேண்டியது என்ன? ஆயத்த ஆடை வடிவமைப்பு துறை என்பது சாதாரணமான துறை அல்ல. மாணவர்கள் கற்கவேண்டிய அம்சங்கள் ஏராளம் உள்ளன. திருப்பூர் என்கிற சிறிய ஊர், இன்று இத்தகைய வளர்ச்சி பெற்றிருப்பது காரணமே ஆயத்த ஆடை உற்பத்தி துறைதான். சீனாவில், 60 சதவீதம் பின்னலாடை; 40 சதவீதம் ஓவன் ஆடை ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் நாட்டிலோ, 72 சதவீதம் ஓவன்; 28 சதவீதம் மட்டுமே பின்னலாடை ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. சந்தையில் தேவைப்பட்டால் மட்டுமே, குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வது நம் நாட்டினரின் மனநிலையாக உள்ளது; ஒரு பொருளை உற்பத்தி செய்துவிட்டு, அந்த பொருளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்வது சீனர்களின் வழக்கமாக உள்ளது. சீன நாட்டு பின்னலாடை உற்பத்தி துறையில், பிராசசிங் பிரிவு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. நம் நாட்டில், ஒரு கிலோ துணியை பிராசசிங் செய்வதற்கு, 150 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது; அதுவே சீனாவில், வெறும் 40 முதல் 50 ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச சந்தைக்கான இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு, 13 சதவீதமாக இருந்தது; தற்போது இந்த பங்களிப்பு, 4 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆனால், சீனாவின் ஏற்றுமதி பங்களிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்