உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள்: அதிபர் டிரம்ப் வேதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து பட்டம் பெறும் திறமையான இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள், மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்வது அவமானகரமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல், குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறார். விசா வழங்குவதில் கடும் கெடுபிடி காட்டப் படுகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான, 'கிரீன் கார்டு'க்கு இணையாக, 'டிரம்ப் கோல்டு கார்டு' என்ற ஒரு விசா முறை அறிமுகப்படுத்தப்படும் என கடந்த செப்டம்பரில் டிரம்ப் அறிவித்திருந்தார்.கோல்டு கார்டு என்பது அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கும் தனிநபருக்கு, திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் விசாவாகும். இதை நேற்று முன்தினம் முறைப்படி துவக்கி வைத்தார் டிரம்ப்.அப்போது அவர் பேசியதாவது:நம் நாட்டிற்கு திறமையானவர்களை அழைத்து வருவதற்கான வழங்கப்படும் பரிசு திட்டம் இது. அமெரிக்காவில் உள்ள விசா சிக்கல்களால், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி பயிலும் மாணவர்கள் மீண்டும் தங்கள் நாடுகளுக்கே திரும்பி செல்ல வேண்டும் என்பது அவமானகரமானதாகும்.விசா பிரச்னைகளினால், கல்லுாரியில் சிறந்த மாணவராக முதலிடம் பெற்றாலும், அவர்கள் அமெரிக்காவில் தங்க முடியும் என்ற உத்தரவாதத்தை அளிக்க எந்த வழியும் இல்லை. இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்கள், சொந்த நாடுகளுக்கு திரும்புவது நமக்கு வெட்கக் கேடானது. இனி இந்தப் பிரச்னை இருக்காது. இங்குள்ள நிறுவனங்கள், இதுபோன்ற திறமைவாய்ந்த மாணவர்களுக்கு, கோல்டு கார்டு வாங்கிக் கொடுத்து தங்க வைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கோல்டு கார்டு அறிமுக நிகழ்ச்சியில் பல முன்னணி தொழிலதிபர்கள், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'டிரம்ப் கோல்டு கார்டு' வாங்குவதற்கு, 9 கோடி ரூபாய் செலவிட வேண்டும். இதன் வாயிலாக அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.சுற்றுலாவுக்கும் கட்டாயம்அமெரிக்காவில் வேலை பார்க்க செல்வோருக்கான எச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்போர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான சமூக வலைதளக் கணக்கு விபரங்களை தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தற்போது, பிரிட்டன், ஜெர்மனி உட்பட, 42 நாடுகளைச் சேர்ந்த பயணியர், மின்னணு முறையில் விண்ணப்பித்து, விசா இன்றி 90 நாட்கள் வரை அமெரிக்காவுக்கு செல்ல முடியும். இவர்கள் இனி தங்கள் ஐந்து வருட சமூக வலைதள கணக்குகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது.மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வழக்கமான விசா விண்ணப்பங்களுடன், சமூக வலைதள கணக்கு தகவல்களையும் வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்