தனியார் பள்ளிகளின் விளம்பரத்தால் பாதிக்கப்படும் அரசு பள்ளிகள்
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் மாணவர் சேர்க்கைக்காக கிராமங்களை நோக்கி தனியார் பள்ளிகள் படையெடுப்பதால், பஞ்.யூனியன் துவக்க பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை பகுதியில் 29 பஞ். யூனியன் துவக்க பள்ளிகள், 20 தனியார் துவக்க பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கைக்காக கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன. கிராம மக்களை சந்திக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள், "மாணவர்களுக்கு இலவச சீருடை, பஸ் வசதி, நோட்டு புத்தகங்கள் தருகிறோம்" என கூறி, கேன்வாஸ் செய்கின்றனர். இதனால், கிராம பகுதியில் உள்ள பஞ். யூனியன் துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒருசில பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லாததால், பள்ளிகளை மூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் மூன்று துவக்க பள்ளிகள் மாணவர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் நிலையில் உள்ளன. இதன்மூலம் அரசு செயல்படுத்தி வரும் ஒரு கி.மீ. க்கு ஒரு துவக்க பள்ளி என்ற திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. அரசு வழங்கும் இலவச திட்டங்களை கூட, தாங்களே வழங்குவதாக கூறி தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். மாவட்ட கல்வி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு, கிராமப்புற துவக்கப் பள்ளிகள் முடங்கிவிடாமல் தொடர்ந்து செயல்பட வழிகாண வேண்டும்.