உள்ளூர் செய்திகள்

இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்கான திறன்களை பெறுவது அவசியம்

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி. பாலசுப்ரமணியம் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி: கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும்?எது நல்லது, எது கெட்டது என்பதை புரிந்துகொண்டு, மன அமைதியோடு, மகிழ்ச்சியாக வாழ்வதே மனித வாழ்க்கை. மனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதுடன், மனதாலும், செயலாலும் யாருக்கும் எந்தவிதமான துன்பத்தையும் கொடுக்கக்கூடாது. துன்பப் படுபவர்களுக்கு நாம் நம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும். இது மனிதனின் கடமை. இதைத்தான் ஆன்மிகமும் கற்றுக்கொடுக்கிறது. இதை மனிதனுக்கு சொல்லிக்கொடுப்பது கல்வி. வேத காலங்களில் உருவான நான்கு வேதங்கள் வாழ்க்கை நெறியை பற்றி சொல்லுகின்றன. பிறகு உபநிசதங்கள், அவற்றை விளக்க புராணங்கள் தோன்றின. நம் நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மகான்கள் தோன்றி கல்வியை வளர்த்து வந்துள்ளனர். நம் நாட்டில் தோன்றிய அளவுக்கு மகான்கள் எந்த நாட்டிலும் தோன்றியதில்லை. இறைவன் கொடுக்காத இயற்கை வளங்கள் எதுவும் இல்லை. அத்தகைய இயற்கை வளங்களைக் கெடுக்காமல் நமது மனநிம்மதிக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதை கற்றுக்கொடுப்பது தான் கல்வி. இன்றைய இந்திய கல்வி முறையில் தேவையான மாற்றம் என்ன?இந்தியாவில் கல்வி முறை வெகுவாக மாறிவருகிறது. முன்பு, படித்ததை அப்படியே ஒப்பித்தல் இருந்தது. தற்பொது புரிந்து படித்து, அவற்றை வாழ்க்கையில் எவ்வாறு அமல்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் கற்பித்தல் முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசுபள்ளிகளிலும் இம்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கலை அறிவியல், பொறியியல் என கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. எனினும், வேலை வாய்ப்பை பொறுத்தமட்டில், "ஹேண்ட்ஸ் ஆன்&&' பயிற்சி தேவையான அளவில் கொடுக்கப்படவில்லை. கல்லூரி படித்து முடித்தவுடன் எந்த பயிற்சியும் இன்றி திறம்பட வேலைசெய்யும் அளவுக்கு தயார்படுத்த வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை. துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் 6 மாதம் படிப்பு காலத்திலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தொழில்நுட்ப கல்வியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பங்கு?பண்ணாரி அம்மன் குழுமத்தால் கிராமப்புற மாணவர்களும் நவீன வசதிகளுடன் தொழில்நுட்பக் கல்வி பெறும் வகையில், பண்ணாரி அம்மன் அறக்கட்டளையின் கீழ் 1996ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருப்பதால் தற்போதைய தொழில் துறை தேவைக்கு ஏற்ப அனுபவமிக்க ஆசிரியர்களாலும், நிபுணர்களாலும் பாடத்திட்டம் மேம்படுத்தப்படுகிறது. சர்க்கரை உற்பத்தி, கிராணைட், பின்னலாடை, விவசாயப் பொருட்கள் உற்பத்தி, போக்குவரத்து, கல்வி, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய துறைகளிலும் பண்ணாரி அம்மன் குழுமம் சிறந்து விளங்குகுவதால் இது சாத்தியமாகிறது. முதல் ஆண்டில் இருந்தே "பிராக்டிக்கல் ஓரியன்டேஷன்&&' கொடுக்கப்படுகிறது. அதனால் மூன்றாம், நான்காம் ஆண்டில் படிக்கும்போது பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. பண்ணாரி அம்மன் குழுமம் பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளதால், இந்த பயிற்சியை பி.ஐ.டி., மாணவர்களுக்கு தரமுடிகிறது. இவைதவிர, துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. எப்போதும் புதியதாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களுக்கு உருவாக்குவது அவசியம். அதையே இக்கல்வி நிறுவனம் தனது அடிப்படை குறிக்கோளாக கொண்டுள்ளது. அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக &&'ஊதtதணூச்&&' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் செயல்திறன் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான விகிதத்தில் படிக்கும்போதே வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர். இந்தாண்டு 30 சதவீத "கோர் இன்ஜினியரிங்&&' மாணவர்கள் தாங்கள் துறை சார்ந்த நிறுவனத்திலே வேலை பெற்றுள்ளதை சாதனையாக கருதுகிறோம். அவ்வாறு வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பு பெறாதவர்களுக்கு எங்களது தொழில் நிறுவனங்களிலேயே வேலை வாய்ப்பு அளிக்கிறோம். கல்வி பணியில் பண்ணாரி அம்மன் குழுமத்தின் எதிர்கால திட்டம்?இன்றைய காலகட்டத்தில் வெல்டர், டர்னர், மேசன் போன்ற திறன் சார்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, திறன் சார்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். இந்தியாவின் தரமான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐ.ஐ.டி., / என்.ஐ.டி., களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அக்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையை ஈடுகட்டுவது எப்படி? ஐ.ஐ.டி.,/என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கு நூறு கோடி ரூபாயாக இருந்தாலும், அரசு எளிதாக ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், ஒரு மாணவருக்கு 32,500 ரூபாய் கல்வி கட்டணத்தில் 18 லட்சம் சதுர அடியில் ஏ.சி., வசதியுடன் அனைத்து முக்கிய ஆய்வகங்கள், கான்பிரன்ஸ் ஹால் உட்பட தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி (பி.ஐ.டி.,)போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் வழங்குகின்றன. அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் போதிய உதவிகளை செய்தால் ஐ.ஐ.டி., / என்.ஐ.டி.,யைவிட தனியார் கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் விரும்புவர். கல்வி வியாபாரமாவதை தடுப்பது எப்படி?கல்விக்காக அரசு பெருமளவு செலவிடுகிறது. அரசு துவக்கப் பள்ளிகளிலேயே ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ரூ. 3 ஆயிரத்திலிருந்தே தரப்படுகிறது. அரசு அளவிற்கே தனியார் கல்வி நிறுவனங்களும் சலுகைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை யார் வேண்டுமானாலும் தரலாம் என்ற நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, மருத்துவ படிப்பு வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஒவ்வொரு மாவட்டம், தாலுக்கா அளவிலும் மருத்துவக் கல்லூரியை துவக்க தனியாருக்கு அனுமதி அளித்தால், தானாகவே கல்விக்கான செலவு குறைந்துவிடும். நிறைய கட்டுப்பாடுகளை விதிப்பதால் தான் புதிய கல்வி நிறுவனங்களின் வருகை குறைகிறது. கல்வித் தரத்தில் பாரபட்சம் காட்டாமல் போதிய விதிமுறைகளை உருவாக்கி, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு வழி ஏற்படுத்தினாலேயே கல்விக்கான விலை குறைந்துவிடும். மருத்துவ படிப்பில் கண், சிறுநீரகம் என அந்தந்த துறை ரீதியாக போதிய வசதிகளை பெற்றுள்ள மருத்துவமனைகள் அதற்கான படிப்புகளை மட்டும் பிரித்து வழங்க அரசு அனுமதிக்கலாம். கல்வியின் தேவைக்கு ஏற்ப நிறைய பல்கலைக் கழகங்கள் உருவாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வித் துறையில் அரசு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அவற்றை அரசாங்கம் தளர்த்திக்கொள்ளவேண்டும். ஒரு தொழிலதிபராக, இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன் எவ்வாறு இருப்பதாக உணருகிறீர்கள்? உலகளவில் இளைஞர்களை அதிகளவில் பெற்றிருப்பதே இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. இளைஞர்கள் அதிகளவில் படித்தாலும், வேலை வாய்ப்பிற்கான திறன்கள் அவர்களிடம் போதிய அளவு இல்லை. அவற்றை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இன்றைய காலத்தில் கல்லூரி மாணவர்களைவிட பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். நிறைய திறன்களை அவர்கள் வளர்த்து வருகின்றனர். எனவே, நாட்டின் எதிர்காலம் மிக பிரகாசமாக உள்ளது. இந்தியாவின் அரசியல் நிலை தான் கவலையளிக்கிறது. தற்போது அண்ணா ஹசாரேவின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. ஊழல் ஒழிந்தாலே உலக நாடுகளுக்கு எல்லாம் இந்தியா ஒரு வழிகாட்டியாக விளங்கும். இவ்வாறு எஸ்.வி. பாலசுப்ரமணியம் தெரிவித்தார். பண்ணாரி அம்மன் குழுமத்தின் செயல் இயக்குனர் கே.எஸ். சுந்தரராமன் உடனிருந்தார்.            


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்