உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை சென்னை, அஜ்மீர், பஞ்ச்குலா, பாட்னா, சண்டிகார், புவனேஸ்வர், டில்லி, கவுகாத்தி ஆகிய மண்டலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டையூ, டாமன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் இருந்து, மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 722 பேர் தேர்வெழுதினர். இதில் மத்திய இளநிலைக் கல்விக் கழக அடிப்படையில், 89 ஆயிரத்து 543 பேரும், பள்ளி அடிப்படையில் 47 ஆயிரத்து 269 பேரும் தேர்வெழுதினர். இவை தவிர்த்து, ஏற்கனவே தேர்வில் தோல்வி பெற்றவர்கள் மற்றும் மதிப்பெண்ணை கூட்டும் வகையிலானோர், 1,257 பேரும் தேர்வெழுதினர். சென்னை மண்டலத்தை பொறுத்தவரை 1,961 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். முதன் முறையாக இந்த ஆண்டு மத்திய இளநிலை கல்விக் கழக அடிப்படையில் தயாரிக்கப்படும் வினாத்தாள் மற்றும் பள்ளி நிர்வாகம் தயாரிக்கும் வினாத்தாள் என இரு வழிகளில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளியிலேயே தொடர்ந்து சி.பி.எஸ்.இ., முறையில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், பள்ளி அடிப்படையிலான தேர்வையும், பத்தாம் வகுப்பு முடித்த பின் உயர்கல்விக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் மற்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்புவோர் சி.பி.எஸ்.இ., போர்டு தேர்வையும் தேர்ந்தெடுத்து எழுதினர். பள்ளி அடிப்படையிலான தேர்வை பொறுத்தவரை, மத்திய இளநிலை கல்விக் கழக நிர்வாகம் கொடுக்கும் அறிவுறுத்தலின் படி, தேர்வுக்கான வினாத்தாளை பள்ளி நிர்வாகமே தயாரித்து தேர்வு நடத்தப்பட்டது. இப்படி இரு வழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நேற்று காலை 11.45 மணியளவில், சென்னை திருமங்கலத்தில் உள்ள மத்திய இளநிலைக்கல்விக் கழகம் சென்னை மண்டலத்தின் பொறுப்பாளர் சுந்தரம், தேர்வு முடிவுகளை வெளியிட்டு கூறும்போது, "இரு வழிகளில் தேர்வு நடத்தப்பட்டதால் தேர்ச்சி பெற்றோர் விகிதத்தை அறிவது சிரமமாகிவிட்டது. குறிப்பாக கிரேடு பாயின்ட்ஸ் முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று 10 கிரேடு பாயின்ட்ஸ் பெற்றவர்கள் எண்ணிக்கையும் சரியாக தெரியவில்லை" என்றார். கிரேடு பாயின்ட்ஸ் முறை கணிக்கும் விதம்: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 91லிருந்து 100 மதிப்பெண் வரை பெற்றவர்கள் ஏ1 கிரேடு எனவும், 81லிருந்து 90 மதிப்பெண் வரை பெற்றவர்கள் ஏ2 கிரேடு எனவும், 71லிருந்து 80 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பி1 கிரேடு எனவும், 61லிருந்து 70 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பி2 கிரேடு எனவும், 51லிருந்து 60 மதிப்பெண் வரை பெற்றவர்கள் சி1 கிரேடு எனவும், 41லிருந்து 50 மதிப்பெண் வரை பெற்றவர்கள் சி2 கிரேடு எனவும், 33லிருந்து 40 மதிப்பெண் வரை பெற்றவர்கள் டி1 கிரேடு எனவும் பிரிக்கப்படுகிறது. இதில் 33 மதிப்பெண்களுக்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் இ கிரேடு ஆகவும், தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த கிரேடு முறையில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் ஏ1 கிரேடு பெற்றவர்களுக்கு 10 கிரேடு பாயின்ட்ஸ் வழங்கப்பட்டு, அவர்களே தேர்வில் சிறந்த இடத்தை பெற்ற மாணவ, மாணவியராக கருதப்படுகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்