செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி இடங்களை அதிகரிக்க முடிவு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இப்போது உள்ள 50 எம்.பி.பி.எஸ். இடங்களை 100 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, கடந்த 46 ஆண்டுகளாக 50 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இந்தக் கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகளை இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தனர். அவர்களிடம் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் கூறினார். இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் மருத்துவக் கல்லூரியை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.