இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை பட்டமளிப்பு விழா
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா, டில்லி மற்றும் 43 மண்டல மையங்களிலும் நேற்று நடந்தது. சென்னை மண்டலத்தில் நடந்த விழாவில், 2,664 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. டில்லி தலைமையகத்திலும், 43 மண்டல மையங்களிலும் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள், செயற்கைக்கோள் வழியாக, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. டில்லி பட்டமளிப்பு விழாவில், திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா, மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் புரந்தரேஸ்வரி மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமது ஆகியோர் உரை நிகழ்த்தினர். சென்னை மண்டல நிகழ்ச்சியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கல்யாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சென்னை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை மண்டலத்தில், இளநிலை கல்வியியலில் 960, மேலாண்மையியலில் 1,210, கணினி பாடப்பிரிவில் 183, பட்டயம், முதுநிலை பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் 311 பேரும் என, 2,664 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், 261 பேருக்கு நேரடியாகயும், 2,403 பேருக்கு அஞ்சல் மூலமாக பட்டங்கள் வழங்கப்பட்டன.ஆங்கிலத்தில் முதுகலை பட்ட மாணவி சரண்யா மற்றும் மேலாண்மை பட்டய படிப்பு மாணவி சுமையா பானு ஆகியோர் தங்க பதக்கங்கள் பெற்றனர்.