டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் வீட்டில் சோதனை: ஒரு அலசல்
வி.ஏ.ஓ., தேர்வு, குரூப்-2 தேர்வு உட்பட பல தேர்வுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், டி.என்.பி.எஸ்.சி.யில் உள்ள சிலர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., தலைவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்லமுத்து மற்றும் இதில் உள்ள 13 உறுப்பினர்களில், பன்னீர்செல்வம், ரத்தினசபாபதி, குப்புசாமி உட்பட பலர், முந்தைய தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய அமைப்பான டி.என்.பி.எஸ்.சி.,யின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, கூறப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி, 10 லட்சம் பேர் பங்கேற்ற வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 3,484 பணியிடங்களுக்கு, இத்தனை லட்சம் பேர் பெரும் கனவுகளுடன் தேர்வெழுதினர். இதன் முடிவுகள், ஜூலையில் வெளியானது. நன்றாக தேர்வெழுதியவர்கள் பலர், தேர்வு முடிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இத்தேர்வில் பெரும் அளவிற்கு முறைகேடுகள் நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குரூப்-2 தேர்விலும், தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்களைக் கூட, டி.என்.பி.எஸ்.சி., கடைசி வரை வெளியிடவில்லை. தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்களை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டது. இதேபோல், வணிக வரி உதவி அலுவலர், வருவாய் உதவியாளர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 6,695 பேரை தேர்வு செய்வதற்கான குரூப்-2 தேர்வு, ஜூலை 30ல் நடந்தது. 4 லட்சத்து 80 ஆயிரத்து 405 பேர் இத்தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான விடைகள், கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. விசாரணை நடத்திய டி.என்.பி.எஸ்.சி., அதுபோல் எதுவுமே நடக்கவில்லை என, ஒற்றை வரியில் பதிலளித்தது. இதேபோல், உதவி பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடந்த தேர்விலும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்தே, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை வரம்புக்குள் இல்லாமல் இருந்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்களை, அந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அப்போதே, விரைவில் அதிரடி நடவடிக்கை வரப்போகிறது என்பதை, தமிழக அரசு உணர்த்திவிட்டது. அதன்படி, அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளுக்குள் நுழைந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அரசு பணியில் சேருவதற்காக நடைபெறும் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாததே இதுபோன்ற முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது. படித்து தேர்வு எழுதுவோர் தேர்வில் தோல்வி அடைவதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், சிபாரிசு செய்பவர்களும் தேர்ச்சி பெறுவதும் உண்மைத் தன்மையை எவ்வளவு கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்த சோதனையில், லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் தெரியவந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயுமா? மறுத்தேர்வு நடத்தி, வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும? அரசு பணி என்ற லட்சியத்துடன் படிக்கும் பல இளைஞர்களின் கனவு நனவாகுமா?