ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகம் அமையும் இடம்
சென்னை: முதல்வர் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகம், டி.பி.ஐ., வளாகத்தில், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரே அமைய உள்ளது. காலியாக உள்ள 4 ஏக்கர் நிலத்துடன், பயன்படுத்தப்படாத சில கட்டடங்களை இடித்துவிட்டு, அந்த இடத்தையும் சேர்த்து, புதிய வளாகம் கட்டப்பட உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம், கல்வித் துறை அலுவலகங்கள் உள்ள டி.பி.ஐ., வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தில், சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனை துவங்கப்படும் என்றும், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து, டி.பி.ஐ., வளாகத்தில், ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகம் கட்டுவதற்கான நிலங்களை அடையாளம் காணும் பணியில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வளாகம்-முழு விவரம் டி.பி.ஐ., வளாகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. ஒட்டுமொத்த கல்வித் துறைக்கும் சேர்த்து, டி.பி.ஐ., (டைரக்டர் ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன்) அலுவலகம் அமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின், தனித்தனி இயக்குனரகம் ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக டி.பி.ஐ., வளாகத்தில் அமைக்கப்பட்டது. பரப்பளவு கிழக்கு மற்றும் தெற்கில், கல்லூரி சாலையையும், வடக்கில் கூவம் ஆற்றையும், மேற்கில் சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியையும் எல்லையாகக் கொண்ட டி.பி.ஐ., வளாகத்தின் மொத்த பரப்பளவு, 16 ஏக்கர். இதில், தற்போதுள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ள கட்டடப் பகுதிகள் போக, 4 முதல் 5 ஏக்கர் வரை மட்டுமே மிச்சம் இருக்கும் என்று, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளாகம், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் தான் இருந்து வருகிறது. காலியிடம் விவரம் வளாகத்தைச் சுற்றிலும், தற்போது கட்டடங்கள் இருக்கின்றன. நடுப்பகுதியில் மட்டுமே காலியிடம் உள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரே, பரந்த காலியிடம் உள்ளது. இது, கார் பார்க்கிங் பகுதியாக, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தையொட்டி, தேர்வுத் துறையின் இரு குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களையும், தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரே, அதிகாரிகள் கார் நிறுத்துவதற்காகக் கட்டப்பட்ட கட்டடம், பயன்படுத்தப்படாமல் உள்ளதால், அதையும் இடித்துவிட அரசு திட்டமிட்டுள்ளது. காலியிடங்களைச் சுற்றியுள்ள, பயன்படுத்தப்படாத சிறிய கட்டடங்கள் பல உள்ளன. அவற்றையெல்லாம் இடித்துவிட்டு, ஒருங்கிணைந்த அறிவுசார் வளாகம் கட்டுவதற்கு பயன்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் டெண்டர் முதல்வரின் அறிவிப்பு குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியானதற்குப் பிறகே, அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த ஆய்வைத் துவக்கியுள்ளனர். புதிய கட்டடத்திற்கான வடிவமைப்பைத் தேர்வு செய்ய, விரைவில் டெண்டர் விடப்பட்டு, அதன்பின், தேர்வு செய்யப்படும் நிறுவனத்திடம், கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.