மனிதனின் முதல் தகவல் தொடர்பு ஓவியத்தில் துவங்கியது
ஊட்டி : "மனிதனுடைய முதல் தகவல் தொடர்பு ஓவியத்தை வைத்தே துவங்கியது" என பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி துவக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் கலாசாரம், மொழி போன்றவற்றில் வேறுபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. அதேபோல இவர்களின் கலையும் வேறுபட்டு காணப்படுகிறது. தோடர்களின் எம்ப்ராய்டரி, கோத்தர்களின் பானை வடிவம் மற்றும் இரும்பு பொருட்கள் வடிவமைப்பு, பனியர்களின் மூங்கில் பொருட்களை உருவாக்குவது, இருளர்கள் இசை கருவிகளை உருவாக்குவது போன்றவற்றில் இவர்கள் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். இந்த கலைகள் தற்போது அழிவின் பிடியை நோக்கி செல்வதால் இவற்றை புதுப்பிக்கும் நோக்கத்துடனும், பழங்குடியினரின் வாழ்வாதாரம் மேம்படவும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணைய நிதியுதவியுடன், ஊட்டி சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், குரும்பர் ஓவிய கலையை புதுப்பிக்கும் நோக்கத்தில் மூன்று மாத பயிற்சி நீலகிரி மாவட்டம் கெங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட மெட்டுக்கல் கிராமத்தில் நேற்று துவக்கப்பட்டது. இதில், 20 குரும்பர் இன இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. துவக்க விழாவிற்கு தலைமை வகித்த நீலகிரி வடக்கு கோட்ட ரேஞ்சர் வித்யாதரன் பேசுகையில், "நீலகிரியில் மிகவும் சிறப்பு பெற்றது பாறை ஓவியங்கள் ஆகும். மனிதனுடைய முதல் தகவல் தொடர்பு ஓவியத்தை வைத்தே துவங்கியது. ஓவியக்கலை அழிவில்லாமல் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மலை வாழ் மேம்பாட்டு ஆணையம் மற்றும் சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையமும் குரும்பர் இன மக்கள் மத்தியில் இதனை புதுப்பிப்பது தற்போது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.