திருச்சி மாவட்ட பள்ளியிலேயே ஜாதி, இருப்பிட சான்று
கூட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது: எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மூலமாகவே ஜாதி, இருப்பிடம், வருமானம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை எவ்வாறு பெற வேண்டும், அதில் என்னென்ன விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விவரம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களில் மாணவர்களின் பெயரை தமிழ், ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும். மாணவரின் தந்தை பெயர், எந்த கிராமம், வட்டம், ஜாதி, உட்பிரிவு போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் உரிய விசாரணை செய்து, தகுதி அடிப்படையில் தாசில்தார்கள் சான்றிதழ்களை விரைவாக அனுப்பி வைக்க முடியும். எனவே இத்திட்டத்தை சிறப்பாக நடத்த தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். பயிற்சி கலெக்டர் சண்முகப்பிரியா, ஆர்.டி.ஓ., சம்பத், முதன்மை கல்வி அலுவலர் மோகனகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் திருச்சி ராமச்சந்திரன், லால்குடி மதி, முசிறி மலர்விழி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.