சத்துணவு மாணவர்கள் மயக்கத்திற்கு காரணம் ‘அழுகிய முட்டை’
வால்பாறை: சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து வாந்தி, பேதி ஏற்பட்டு வருவதை தொடர்ந்து அதிகாரிகள் பள்ளியை நேரில் ஆய்வு செய்தனர். வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி எஸ்டேட் அரசு துவக்கப் பள்ளியில் செப்., 9ம் தேதி சத்துணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 9 மாணவர்களுக்கு திடீர் வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மாணவர்கள் வீடு திரும்பினர். இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜான்பால், நகராட்சி செயல்அலுவலர் பெஞ்சமின் குணசிங் ஆகியோர் மானாம்பள்ளி துவக்கப் பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது, ‘சுகாதாரமான முறையில் பாத்திரங்களை நன்றாக கழுவி சமையல் செய்ய வேண்டும். அழுகிய முட்டை இருந்தால், அலுவலகத்திற்கு புகார் செய்ய வேண்டும்’ என்று சத்துணவு ஊழியர்களிடம் அறிவுரை கூறினர். இந்நிலையில், வால்பாறை நகர அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 130 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 45 மாணவர்களுக்கு நாள்தோறும் சத்துணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்க வேகவைத்த போது அனைத்து முட்டைகளும் அழுகிய நிலையில் இருந்ததால், செப்., 9ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை. இது குறித்து, சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதி, நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தார். வால்பாறை சத்துணவு மையங்களில் அழுகிய முட்டைகள் வழங்குவதாலும், சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைப்பதாலும் தான் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.