உள்ளூர் செய்திகள்

‘ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’: மத்திய அமைச்சர்

புதுச்சேரி: உயர்கல்வியில் அடிப்படை அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து தென் மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மூன்று நாள் மாநாடு, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் செப்., 11ம் தேதி துவங்கியது. மாநாட்டில் மத்திய மனிதவள உயர்கல்வி இணை அமைச்சர் புரந்தேஸ்வரி பேசியதாவது: இந்தியா விடுதலை அடைந்தபோது, 20 பல்கலைக்கழங்கள்தான் இருந்தன. இன்று 438 பல்கலைக்கழகங்கள் உள்ளன. கல்லுõரிகள் அதிகளவில் பெருகி உள்ளன. உயர் கல்வியில் தற்போது 1 கோடியே பத்து லட்சம் பேர் படித்து வருகின்றனர். தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள், தங்களுடைய கல்லூரி ஆசிரியர்களின் தேவைகளை மாநிலப் பல்கலைக்கழகங்களில் இருந்து தான் பெறுகின்றன. எனவே மாநிலப் பல்கலைக்கழகங்களை விரிவுபடுத்த உள்ளோம். இன்றைய கல்வி முறையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்மூலம் உயர் கல்வியில் எதிர்பார்க்கின்ற வளர்ச்சியைப் பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவும், தேசிய தொழில் நுட்பக் கழகமும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்கு முனைப்பாக செயல்படுகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக எம்.எம். சர்மா தலைமையில் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தரம் மிகுந்த ஆய்வு நிலையங்களை நாட்டின் பல பகுதிகளில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு, மேற்படிப்பில் மாணவர்களுக்கு கல்வியும், ஆராய்ச்சியும் ஒருங்கிணைந்த முறையில் அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக மத்திய அரசு, இந்திய அறிவியல் கல்வி ஆய்வு நிறுவனங்களை கொல்கத்தா, புனே ஆகிய பகுதிகளில் உருவாக்கி உள்ளது.  தற்போது மூன்றாவதாக பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உருவாக்கப்பட்டு வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்த புதுமையான முறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இளம் விஞ்ஞானிகள் சிறு சிறு ஆய்வுப் புத்தகங்களைப் படித்து, ஆய்வுக் கூடத்தில் சோதனை நடத்த முன்வர வேண்டும். புதிய விஞ்ஞானிகளின் இளம் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். விஞ்ஞான ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்கள் பெருக வேண்டும். உயர் கல்வி நிலையங்களில் போதனை முறை தரம் மிகுந்ததாக இருக்க வேண்டும். மாணவர்களிடத்தில் ஆய்வுத் துறைகளில் ஆர்வம் குறையாமல் இருக்க, உயர் கல்வியாளர்கள் கலந்தாய்வு செய்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு புரந்தேஸ்வரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்