தென் மண்டல அளவிலான துணைவேந்தர்கள் மாநாடு துவக்கம்
புதுச்சேரி: தென் மண்டல துணைவேந்தர்களுக்கான மூன்று நாள் மாநாடு, புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாடு மற்றும் பண்பாட்டுத் தொடர்பியல் அரங்கில் செப்., 11ம் தேதி துவங்கியது. மாநாடு 13ம் தேதி நிறைவடைகிறது. சங்கத் தலைவர் பேராசிரியர் பதான் தலைமை தாங்கி பேசுகையில், இந்த மாநாட்டின் மூலம் துணைவேந்தர்களின் கருத்துக்களை அறிந்து அறிவியல் தேவைக்கு தீர்வு காண உள்ளோம் என குறிப்பிட்டார். கான்பூர் ஐ.ஐ.டி., நிர்வாகக் குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பேசும்போது, பல்கலைக்கழகங்களின் எதிர்கால வளர்ச்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கும், அதற்கான முயற்சியிலும் துணைவேந்தர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தர வேண்டும் என வலியுறுத்தினார். மனித வள உயர்கல்வி இணை அமைச்சர் புரந்தேஸ்வரி மாநாட்டை துவக்கி வைத்து, புதுச்சேரி பல்கலைக்கழக கீதம் அடங்கிய ‘சிடி’ யை வெளியிட்டார். மாநாட்டில், உயர்கல்வியில் அடிப்படை அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து 39 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், முன்னாள் துணை வேந்தர்கள் ஞானம், பிரசாத், பவார், பல்கலைக்கழக அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரீன் வரவேற்றார். இந்திய பல்கலைக் கழக சங்க பொதுச் செயலாளர் தோங்கான்கர் வாழ்த்தி பேசினார். பண்பாடு மற்றும் பண்பாட்டு தொடர்பியல் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.