கேரள-தமிழக எல்லையில் பள்ளிகளுக்கு மர்ம ‘தீ’
வாளையார்: கஞ்சிக்கோடு உயர்நிலை பள்ளியில், முக்கிய ஆவணங்களை வைத்திருந்த, இரு அறைகள் மர்மமான முறையில் எரிந்தன. தமிழக-கேரள மாநில எல்லை பகுதியில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பத்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இரு தினங்களுக்கு முன், ஓணம் பண்டிகையொட்டி, கஞ்சிக்கோடு ஊர் மக்கள் பள்ளியில் ஓணம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் ஊர் மக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டிருக்கும் போது, பள்ளியில் இரு அறைகள் விஷமிகளால், தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதில், தேர்வுத் தாள்கள், மாணவர்களின் செய்முறை பொருட்கள், பள்ளி அட்டவணைகள், பைல்கள் வைக்கப்பட்டு இருந்தன. அறைகளின் கதவுகள், ஜன்னல்கள், பீரோ, நாற்காலி போன்றவையும் எரிந்து சாம்பலாயின. பள்ளியின் அறைகளிலிருந்து புகை எழும்புவதை கவனித்த ஊர் மக்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பள்ளியின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பீரோ எரிந்து அனைத்தும் சம்பலாயின. பள்ளி விடுமுறை நாளாக இருந்ததால், விஷமிகள் நாச வேலை செய்திருக்கலாம் என தெரிகிறது. சில வாரங்களுக்கு முன், எல்லையில் உள்ள மற்றொரு பள்ளியும் இதே பாணியில், தீயிட்டு கொளுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.