கம்ப்யூட்டர் கல்வி வசதி: தமிழகப் பள்ளிகள் பின்னடைவு!
இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் ஐ.டி. துறையில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தில் உள்ள 22.13 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் வசதி கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 52,433 பள்ளிகளில் 11,603 பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் வசதி இருக்கிறது. தொடக்கப் பள்ளிகளில் மட்டுமே பார்த்தால், 11.49 சதவீத பள்ளிகளில்தான் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. மத்திய மனித வளத்துறை மற்றும் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எஜுக்கேஷனல் பிளானிங் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 28,882 பள்ளிகளிலும் (33.42 சதவீதம்) ஆந்திரத்தில் 19,154 பள்ளிகளிலும் மத்திய பிரதேசத்தில் 16,064 பள்ளிகளிலும் ராஜஸ்தானில் 13,336 பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 2003-04 நிலவரப்படி நாட்டில் 72 ஆயிரம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதாவது 7.68 சதவீதப் பள்ளிகளில் இந்த வசதி உள்ளது. இந்த எண்ணிக்கை 2006-07ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.67 லட்சமாக (13.43 சதவீதம்) அதிகரித்துள்ளது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் மாநிலங்களில் டில்லி முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 68.85 சதவீத பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. இதையடுத்து உள்ள கேரளத்தில் 60.9 சதவீதமும் மகாராஷ்டிரத்தில் 33.42 சதவீதமும் குஜராத்தில் 24.03 சதவீதமும் தமிவகத்தில் 22.13 சதவீதமும் உள்ளன. டில்லி, சண்டீகர், கேரளா, குஜராத், லட்சதீவுகள், மகாராஷ்டிரா, ஒரிசா, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு நீங்கலாக மற்ற மாநிலங்களில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.