உள்ளூர் செய்திகள்

புதுச்‌‌சேரியில் வழிகாட்டி: முதல் நாளி‌லே‌யே மாணவர்கள் குவிந்தனர்

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள், அடுத்ததாக என்ன படிக்கலாம் என்பது குறித்த தகவல்களை அள்ளி தருகின்ற, உயர்கல்விக்கான, "வழிகாட்டி" நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற, தினமலர் "வழிகாட்டி" நிகழ்ச்சி, புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள சுபலட்சுமி மகாலில் நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியை, தினமலர் இதழுடன், சென்னை, மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. வழிகாட்டி நிகழ்ச்சியில், கருத்தரங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்காட்சியை, டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.சி.எஸ்., அருண்குமார் துவக்கி வைத்தார். விழாவில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி, ஆராய்ச்சி பல்கலைக்கழக இயக்குனர் கணேசன் பேசுகையில், "நாட்டின் வளர்ச்சிக்கு உயர் கல்வி மிகவும் அவசியம். இதனால், நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் துவக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறோம் என தெரியாமல் தடுமாறுகின்றனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு வழிகாட்ட முடியாமல் குழப்பம் அடைகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தினமலர் நாளிதழ் "வழிகாட்டி&' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, கல்வி சேவை ஆற்றி வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைக்கிறது" என்றார். விழாவில், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி, ஆராய்ச்சி பல்கலைக்கழக பதிவாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். "வழிகாட்டி" நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அழகாக அமைத்துள்ளன. இந்த அரங்குகளில் எந்தந்த கல்லூரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன, வேலைவாய்ப்பு விபரங்கள், கட்டணம் மற்றும் சேர்க்கை நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. பல அரங்குகளில், சேர்க்கை விண்ணப்பங்களும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. "வழிகாட்டி" நிகழ்ச்சி, காலை 10:00 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், காலை 8:00 மணி முதலே மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் அணி அணியாய் வந்த வண்ணம் இருந்தனர். நீண்ட வரிசையில் சென்று, "ஏசி" வசதி செய்யப்பட்ட ஹாலில், கல்வி நிறுவன அரங்குகளை பார்வையிட்டு, ஆர்வமாக தகவல்களை கேட்டு பெற்றனர். கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் படிப்புகளை மட்டுமே அறிந்திருந்த மாணவர்களுக்கு கப்பல், விமானம், அனிமேஷன் உள்ளிட்ட பலவித துறைகளை சேர்ந்த படிப்புகள் பற்றியும், அவற்றின் வேலைவாய்ப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் அரியவாய்ப்பு வழிகாட்டியில் கிடைத்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், அவற்றில் உள்ள படிப்புகள், முகவரி, "வெப்சைட்" உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய முழுமையான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த, 128 பக்க "வழிகாட்டி-2013" புத்தகத்தில், பிளஸ் 2 வகுப்பிற்கு பின், எந்த படிப்பை படிக்கலாம் என்பதற்கான முழு விபரங்களும் அடங்கி இருந்தது. வேலைவாய்ப்பு விபரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்தை மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர். கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ள கண்காட்சியை, காலை 10.00 மணிக்கு முதல் இரவு 7.00 மணி வரை பார்வையிட்டு, விபரங்களை பெறலாம். நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கும் கருத்தரங்கு, காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை, இரண்டு அமர்வுகளாக நடக்கிறது. "வழிகாட்டி" நிகழ்ச்சியில், கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி இலவசம். பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகளே... உங்களது எதிர்காலத்தை செம்மைபடுத்திக் கொள்ள, "வழிகாட்டி" நிகழ்ச்சிக்கு வாங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்