உள்ளூர் செய்திகள்

எரியும் விளக்கே மற்றொரு விளக்குக்கு ஒளி தரும்

திருச்சி: துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்த, அவர்களை நூலக உறுப்பினராக்கும் திட்டம் இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் துவங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள, 1,300 துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 500 பேர் பல்வேறு நூலகங்களில், உறுப்பினராக உள்ளனர். ஏப்ரல், 23ம் தேதி வரும் உலக புத்தக தினத்துக்குள், அனைத்து ஆசிரியர்களையும் நூலக உறுப்பினராக்கும் திட்டம் நேற்று முன்தினம் (2ம் தேதி) முதல் துவங்கியது.அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 யூனியன்களிலும் நேற்றுமுன்தினம் தலைமையாசியர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்கும், ஒவ்வொரு பள்ளியில் தலைமையாசிரியருக்கும், பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை பொறுத்து, நூலக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டன. படிவத்தை பெற்றுக்கொண்ட பள்ளி ஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு அருகில் அல்லது வீட்டுக்கு அருகிலுள்ள நூலகத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு அந்த நூலகத்தின் உறுப்பினர் அட்டை உலக நூலக தினத்துக்குள் வழங்கப்படும். திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:திருச்சி மாவட்டத்தில், மைய நூலகம், பகுதி நூலகம், நடமாடும் நூலகம் என மொத்தம், 130 நூலகங்கள் உள்ளன. உலக புத்தக தினத்தையொட்டி, உறுப்பினர் சேர்க்கை, வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். முதற்கட்டமாக உறுப்பினரில்லாத ஆசிரியர்களை உறுப்பினராக்க இருக்கிறோம். தொடர்ந்து ஆசிரியர்களை கொண்டே, உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரும், தொடக்கக்கல்வி அலுவலருமான ஜெயக்குமார் கூறியதாவது:"எரியும் விளக்கே மற்றொரு விளக்குக்கு ஒளி தரும்" என்ற தேசியக்கவி ரவீந்திரநாத் தாகூரின் வரிகளை போல, தொடர்ந்து கற்கும் ஆசிரியர்களே, தலைச்சிறந்த மாணவர்களை உருவாக்கமுடியும். இதற்கான தொடர் முயற்சிகளில், மாவட்ட எஸ்.எஸ்.ஏ.,வும், தொடக்கக்கல்வித் துறையும் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியருக்கு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிறந்த ஆசிரியர் மட்டுமின்றி, அதிக மாணவரை நூலக உறுப்பினராக்கும் ஆசிரியருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், மாதந்தோறும் ஆசிரிய பயிற்சிக்கூட்டம் நடக்கும். இக்கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களிடம், ஆசிரியர்கள் படித்த புத்தகம் குறித்து திறனாய்வு செய்யப்படும். புத்தகத்தை சிறப்பாக திறனாய்வு செய்த ஆசிரியருக்கும், வீட்டிலேயே அதிக புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ள ஆசிரியருக்கும் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்