உள்ளூர் செய்திகள்

இசைக் கல்லூரியில் அரசு அலுவலகங்கள்: பரிதாபத்தில் மாணவர்கள்!

இதனால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பறைகள் இல்லாமல் அலைக்கழிப்புக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த 1949ம் ஆண்டு சென்னை அடையாறில் அரசு இசைக்கல்லூரி துவக்கப்பட்டது. மூன்று துறைகளுடன் உருவான இக்கல்லூரி தற்போது குரலிசை, வீணை, வயலின், இசையியல், தாளவாத்தியம், குழலிசை, நாதசுவரம், தவில், பரதநாட்டியம், நட்டுவாங்கம், நாட்டுப்புறக்கலை, இசை ஆசிரியர் பயிற்சி உட்பட பல்வேறு துறைகளைக் கொண்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில், முழுநேர மற்றும் பகுதி நேர படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்லூரியின் தற்போதைய மாணவர் எண்ணிக்கை 450. அதில் அதிகமானோர் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், அரசு துறைகள் படிப்படியாக இக்கல்லூரியில் தஞ்சம் புகுந்து, பிறகு வகுப்பறைகளையே அலுவலங்களாக மாற்றிக் கொள்கின்றன. வணிக வளாகம், அரசு அலுவலகம் ஆகியவற்றின் தொடர் ஆக்கிரமிப்பால் இசைக் கல்லூரி சுருங்கி வருகிறது. ஆக்கிரமிப்பின் ஆரம்பம்: இசை கல்லூரி 1991ம் ஆண்டு கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு, அத்துறை முதலில் கல்லூரியின் முக்கிய கட்டடத்தை தனக்கு உரித்தாக்கிக் கொண்டது. அதனையடுத்து, தற்காலிகமாக கல்லூரியில் இடம் கேட்டு வந்த பாலபவன் எனும் ஜவகர் சிறுவர் மன்றமும் வகுப்பறையையே தனது அலுவலகமாக நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளது. மாணவர்களின் அரங்கேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கல்லூரி வளாகத்திலேயே தாகூர் கலையரங்கம் அமைக்கப்பட்டது. இக்கலையரங்கில் உள்ள அறைகளில் தான் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைமை அலுவலகம் கடந்த ஆண்டு முதல் செயல்பட துவங்கியது. போதிய வசதிகள் இல்லை, இடப்பற்றாக்குறை என்றெல்லாம் குரல் எழுந்ததால், அந்த நலவாரியத்திற்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அது வேறெங்கும் இல்லை; இசைக் கல்லூரி வாய்ப்பாட்டு மாணவியரின் வகுப்பறைகள் தான். கலை, பண்பாட்டுத் துறை செயல்பட்டு வரும் கட்டடத்தின் மற்றொரு பகுதியை, நாட்டுப்புற கலைஞர்களின் நலவாரியத்திற்கு வழங்க தமிழக முதல்வரும் அனுமதி வழங்கியுள்ளார். இதனால், வகுப்பறைகளை இழந்த மாணவியர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதன் விளைவு கல்லூரி முழுவதும் உள்ள அறைகளில் இடம் தேடப்பட்டு இறுதியில் மாணவியருக்கு வழங்கப்பட்டது, குரலிசை மாணவர்களின் வகுப்பறை. குழலிசைத் துறைக்கோ, வசதி குறைவால் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் வெளியேறிய அந்த அறையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற நிலையால் பரதநாட்டியத் துறை மாணவியர் விடுதியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவர் கூட முறையாக பயிற்சி எடுக்க போதாத விடுதியின் முன்புறம் உள்ள அந்த சிறிய இடத்தில் 40 மாணவியருக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்கும் அவலநிலை இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிறது. மேலும், அரசு அலுவலகங்களுக்கு பலரும் வந்துசெல்வதால், கல்லூரிக்கு ஏற்ற சூழல்... அதுவும் இசை கற்க வேண்டிய அமைதியான சூழ்நிலை அடியோடி மாறியுள்ளது. இதனால், மாணவ மாணவியரால் முறையாக பயிற்சி பெற முடியாத பரிதாப நிலை உள்ளது. இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘அரசு கல்லூரி, பள்ளிகளில் அரசு அலுவலங்கள் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல. பல கல்லூரிகளில் இதே நிலை தான் உள்ளது. எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சிக் கழக வளாகத்தில் தனி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும் கலை, பண்பாட்டுத் துறை அங்கு மாற்றப்படும்’ என்று தெரிவித்தனர். அடிப்படை, பாதுகாப்பு வசதி குறைவு: கல்லூரி வளாகத்திற்குள் செயல்படும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவியருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. கல்லூரி வளாகத்தில் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெறுவது கிடையாது. பெரும்பாலான இடங்களில் செடிகள் வளர்ந்து புதர்போல காட்சியளிக்கின்றன. மின்சார வசதியே இல்லாத இருண்ட எஞ்சியுள்ள வகுப்பறைகளில் தான் எதிர்கால கலைமணிகள் உருவாகி வருகின்றனர். இதுதவிர, கல்லூரியின் வாயில் முன்பிருந்த பஸ் ஸ்டாப் மாற்றப்பட்டதால் கண் பார்வையற்ற, உடல் ஊனமுற்ற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இத்தனை பிரளயங்களுக்கு இடையே இசையின் மீது தீராத லட்சியம் கொண்ட மாணவர்கள் மட்டுமே கல்வியை தொடர்கின்றனர். மற்றவர்கள் வந்த வேகத்திலேயே வெளியேறுகின்றனர். இதனால் மாணவர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. மாநகரின் மத்தியில், இளைய சமுதாயத்திடம் இசையை வளர்க்கும் உன்னத பணியை மேற்கொள்வதில் உள்ள இத்தகைய அவலங்களை களைய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் தான், வருங்கால கலைஞர்களுக்கு வசந்தகாலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்