கோவை அண்ணா பல்கலை வசமாகிறது ஜி.சி.டி., கல்லூரி?
கோவை: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோவை அண்ணா பல்கலை எடுத்து வருகிறது. இதற்கான அறிவிப்பு, நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் எனத்தெரிகிறது. கோவை தடாகம் ரோட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு தொழில்நுட்பக்கல்லூரி (ஜி.சி.டி.,) செயல்பட்டு வருகிறது. இது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரி. இக்கல்லூரியை கடந்த ஆண்டு கையகப்படுத்த முயற்சித்தது கோவை அண்ணா பல்கலைக்கழகம். மாணவர்கள், ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால், முயற்சி பாதியில் கைவிடப்பட்டது. இங்கு, பருவத்தேர்வுக்கு மிகக்குறைவான கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல்கலையின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்டால், கல்விக்கட்டணம் அதிகரிக்கும் என்பதே மாணவர்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில் ஜி.சி.டி., கல்லூரியை கையகப்படுத்த கோவை அண்ணா பல்கலை எடுத்து வரும் முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது; கோப்புகள் அனைத்தும் உயர்கல்விச் செயலரின் கையெழுத்துக்காக காத்திருக்கின்றன என்று, நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கல்லூரி மாணவ, மாணவியருக்கு பருவத்தேர்வு, இம்மாத இறுதியில் முடிகிறது. இத்தேர்வுக்குப்பின், மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விடுவர். அந்நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டால், மாணவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு இருக்காது என <உறுதியாக நம்புகிறது உயர்கல்வித்துறை. இம்மாத இறுதியில் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஜி.சி.டி., கல்லூரியை, அண்ணா பல்கலை கையகப்படுத்தினால், கல்லூரியின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தப்படும். கல்லூரியில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் பாடப்பிரிவுகளுக்கான கல்விக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஏராளமான புது படிப்புக்களை துவங்க முடியும். ஜி.சி.டி., கல்லூரியில் 22 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியர்கள் கூட இன்னும் விரிவுரையாளர் என்ற நிலையில் உள்ளனர். இக்கல்லூரி பல்கலை வசம் வந்தால், உதவிப் பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைக்கு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும். கல்லூரி முதல்வர் என்ற பதவி நீக்கப்பட்டு, ‘டீன்’ என்ற பதவி கொண்டுவரப்படும். பல்கலை வசம் வந்தபின், கல்லூரியின் அதிகாரம் இன்னும் அதிகரிக்கும். அதே சமயம், தன்னாட்சி அந்தஸ்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. இவ்வாறு துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறினார்.