துவக்கப்பள்ளி மாணவர்களை ஈர்த்துள்ள ‘ஹலோ இங்கிலீஷ்‘ திட்டம்
தூத்துக்குடி: தமிழகத்தில் துவக்கப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பதற்காக ‘சிடி’க்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும் ‘ஹலோ இங்கிலீஷ்’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இணை இயக்குனர் லதா தெரிவித்தார். தூத்துக்குடியில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. அதனால் மாணவர்கள் சுந்திரமாக பேச கற்றுக் கொண்டுள்ளனர். தற்போது வகுப்பறைகள் குழந்தைகளை மையமாக வைத்தே உள்ளன. துவக்கப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலத்திறனை வளர்க்க ‘ஹலோ இங்கிலீஷ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் பத்து ‘சிடி’க்களைப் பயன்படுத்தி மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்தல், படக்காட்சிகளை பார்க்க செய்தல், வாக்கியங்களை திருப்பிச் சொல்லுதல் உள்ளிட்ட பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி கற்றுத்தரப்படுகிறது. அவர்களுக்கு ‘கிராமர் பாக்கேஜ்’ மூலம் ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைத்தல் குறித்து கற்றுத்தரப்படுகிறது’ என்றார்.