தள்ளாத வயதிலும் மருத்துவ துறையில் சிறப்பு பட்டம்
சென்னை: தள்ளாத வயதிலும் விடாமுயற்சியுடன், மருத்துவத் துறையில், புதிய பட்டம் ஒன்றை பெறுகிறார், சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராமதாஸ், 88. ஆந்திராவில் பிறந்த இவர், சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், 1953ல், எம்.பி.பி.எஸ்., பட்டத்தை பெற்றார். தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறையில் முதுகலை மருத்துவப் பட்டம், இப்பிரிவிலேயே பட்டயப் படிப்பையும் முடித்தார். சென்னை, அரசு பொது மருத்துவமனையில், காது, மூக்கு, தொண்டை பிரிவில் பணியாற்றி ராமதாஸ், அத்துறை பேராசிரியராக பணிபுரிந்தார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், காது, மூக்கு, தொண்டை நிபுணராக, 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவத்துக்கான பட்டத்தை, ராமதாஸ் பெறுகிறார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்தின், வெள்ளி விழா பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில், இன்று 12:00 மணிக்கு நடக்க உள்ளது. பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழாவில், மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்பு, நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடிந்த, 11,864 பேருக்கு பட்டங்கள்; மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கியோர் உட்பட, 149 பேருக்கு பதக்கங்கள்; மூன்று நிபுணர்களுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.