உள்ளூர் செய்திகள்

சட்ட பல்கலை கட்டுமான பணி விரைவில் துவக்கம்

சென்னை: சென்னை, தரமணியில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக கட்டுமான பணி, விரைவில் துவங்க உள்ளது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. 1997ல், துவங்கப்பட்ட இப்பல்கலையில், ஆற்றல்சார் பள்ளி, வகுப்பறைகள், துணைவேந்தர் அலுவலகம், நூலகம், விடுதிகள் உள்ளிட்டவை, இயங்கி வருகின்றன. இடநெருக்கடியில் இயங்கி வரும் சட்ட பல்கலைக்கு, மாற்று இடம் வேண்டும் என, அரசுக்கு, பல்கலை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 2009ல், தி.மு.க., அரசு, தரமணி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், நிலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நிதி ஒதுக்கவில்லை. பல்கலையில் நிதி இல்லாததால், அரசு நிதி ஒதுக்க வேண்டும் என, பல்கலை நிர்வாகம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தற்போதைய அரசு, 60 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது. சென்னை, தரமணியில் அமைக்க உள்ள பல்கலை வளாகத்தில், நிர்வாக அலுவலகம், வகுப்பறைகள், நூலகம், மாணவர், மாணவியர் விடுதி, துணைவேந்தர், பதிவாளர் இல்லங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும். பொது பணித்துறை சார்பில், பல்கலைக்கான திட்ட வரைவு பணி நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் கட்டுமான பணி துவங்க உள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, பல்கலை பதிவாளர் சங்கர் கூறியதாவது: பல்கலை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, விரைவில் நடக்க உள்ளது. "கட்டுமான பணி ஓராண்டிற்குள் முடிவடைந்து விடும்&' என, பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது. வரும், 2014 -15ம் ஆண்டில், தரமணி பல்கலைக்கழகம் பயன்பாட்டிற்கு வரும். இப்புதிய வளாகம் வந்தால், புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்துதல், மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். மேலும், போலீசாருக்கு புதிதாக பயிற்சி வகுப்புகள், குறுகிய கால வகுப்புகளும் நடத்தப்படும். தடயவியல் ஆய்வகம் மற்றும் கணினி குற்ற தடுப்பு மையம் அமைக்கப்படும். சேவை வளாகம் என, தனியாக அமைய உள்ள கட்டடத்தில், வங்கி, சட்ட உதவி மையம், தேசிய மாணவர் படை, நாட்டுநல பணித் திட்டம் உள்ளிட்டவை அமையும். இவ்வாறு, சங்கர் கூறினார். புதிய வளாகம் துவங்கும் நிலையில், பழைய வளாகத்தில், சட்ட பல்கலையின் தொலைதூர கல்வி நிறுவனம், ஆய்வு மையங்கள் மற்றும் முக்கிய சேவை மையங்கள் ஆகியவை செயல்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்