தொல்லியல் மூலமே முழுமையான வரலாற்றை அறிய முடியும்
சென்னை: "கல்வெட்டு, இலக்கியம் போன்றவற்றின் மூலம், 2 சதவீத வரலாற்றை மட்டுமே அறிந்துள்ளோம்; ஆனால், இன்னும் அறியப்படாத வரலாறு, 98 சதவீதம் உள்ளது. எலும்பு, கற்கள் போன்றவற்றின் மூலமே, அந்த வரலாற்றை அறிய முடியும்; அதற்கு தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளே, அடிப்படையானது" என சென்னை கிறிஸ்தவ கல்லூரியின், வரலாற்றுத் துறை பேராசிரியர், ஜினு கோஷி கூறினார். தொல்லியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும், "திங்கட்பொழிவு" என்ற பெயரில், சிறப்பு கருத்தரங்கம் நடக்கும். இதில், தொல்லியல் அறிஞர்கள், அத்துறையின் தற்கால நடைமுறைகள் குறித்து, சிறப்புரை ஆற்றுவர். இம்மாத சிறப்பு கருத்தரங்கமும், சென்னை தினத்தை முன்னிட்டு, சிறப்பு கருத்தரங்கமும், எழும்பூரில் உள்ள, தொல்லியல் துறை அலுவலகத்தில், நேற்று நடந்தது. சென்னை பல்கலை முன்னாள் தொல்லியல் துறை தலைவர், கே.வி.ராமன், சிறப்பு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். இக்கண்காட்சியில், சென்னையில் உள்ள, பகுதிகளில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுடெடுக்கப்பட்ட, நாணயங்கள், கல்வெட்டுக்கள், கற்கள் போன்றவற்றின் புகைப்படங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டன. இம்மாதம், 30ம் தேதி வரை, இக்கண்காட்சி நடக்கிறது. திங்கட்பொழிவில், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின், வரலாற்றுத் துறை பேராசிரியர், ஜினு கோஷி, "கலையின் நிலை - சென்னையை சுற்றியுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட கால இடங்கள்: ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் பேசினார். இதில், பேராசிரியர், ஜினு கோஷி பேசியதாவது: கல்வெட்டு, இலக்கியம் போன்றவற்றின் மூலம், 2 சதவீத வரலாற்றை மட்டுமே அறிந்துள்ளோம்; ஆனால், இன்னும் அறியப்படாத வரலாறு, 98 சதவீதம் உள்ளது. எலும்பு, கற்கள் போன்றவற்றின் மூலமே, அவ்வரலாற்றை அறிய முடியும்; அதற்கு தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளே, அடிப்படையானது. ராபர்ட் புரூஸ் புட்டிலிருந்து, சாந்திபப்பு வரை, பல்வேறு அகழாய்வுகளில் கிடைக்கப்பட்ட கற்களை, அளந்து வரலாற்றை அறிந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் ஏரி ஆகிய பகுதிகளையும், தாம்பரம் அருகில் உள்ள, மலைப்பட்டு, நல்லூர், மணிவாக்கம், சென்னையை சுற்றியுள்ள கொளத்தூர் போன்ற பகுதிகளை, எங்கள் குழுக்கள் அகழாய்வு செய்த போது, இடைக் கற்காலத்தில் இருந்து, நுண்ணிய கற்காலத்துக்கு தாவிய கற்களே கிடைத்தன. இவை இரண்டுக்குமான, இடைப்பட்ட கற்கால கற்கள் கிடைக்கவில்லை. தற்போது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், "மார்போ மெட்ரிக் அனலைசிஸ்" என்ற கருவியில், "மைக்ரோ ஸ்கைப்" என்ற தொழில் நுட்பத்தின் மூலம், எப்பகுதியில் கற்கள் கிடைத்தாலும், அதை அங்கிருந்தே அளக்க முடியும். இது, தொல்லியல் ஆய்வுகளுக்கு, மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். இவ்வாறு அவர் பேசினார்.