இந்திய வரைபடத்தின் வடிவில் பூச்செடி வளர்க்கும் மாணவிகள்
திருவெண்ணெய்நல்லூர்: உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவிகள் இந்திய வரை படத்தின் வடிவில் பூச்செடியை வளர்த்து வருகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்றின் ஓரம் கஸ்தூர்பாகாந்தி உண்டு உறைவிடப் பள்ளி செயல் படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாணவிகள் படிக்கின்றனர். கார்மலைட் சிஸ்டர்ஸ் ஆப்செயின்ட் தெரசா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்படும் இப்பள்ளியில் மாணவிகளுக்கு பல தனிப்பயிற்சிகளும், மரக்கன்றுகள், தோட்டப்பயிர் வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. புதிய கட்டடத்தின் நுழைவு வாயில் பகுதியில் இந்திய வரைபடத்தின் வடிவில் பட்டுரோஜா செடியை மாணவிகள் வளர்த்து வருகின்றனர். இதில் பூக்கும் ரோஸ்நிற பூக்கள் வரைபடத்திற்கு ஏற்றார்போல் வரிசையாக பூத்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று கொடியேற்றும் போது, இந்தியாவை நினைப்பவர்களிடையே தினம் இந்திய வரைபடத்தின் வடிவில் பூக்களை பூக்க வைத்து மகிழ்ச்சியடையும் ஆதரவற்ற மாணவிகளை பாராட்டித்தானே ஆக வேண்டும்.