வேலைவாய்ப்பு அலுவலக ஆன்-லைன் பதிவில் சிக்கல்
தேனி: வேலைவாய்ப்பு அலுவலக ஆன்-லைனில் பதிவு செய்யும் போது, பல நேரங்களில் தடங்கல் ஏற்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கல்வித் தகுதியை பதிவு செய்வதற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இணையதளத்தில், ஆன்-லைனில் பதிவு செய்யலாம். எந்த மாவட்டத்தில் இருந்தாலும், இந்த சேவையை பயன்படுத்தலாம். புதிய பதிவு, கூடுதல் கல்வித்தகுதி, பதிவு புதுப்பித்தல், முகவரி மாற்றம் போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம். பதிவுதாரர், அருகில் உள்ள பிரவுசிங் மையத்தில், இந்த சேவையை பயன்படுத்தலாம். ஆனால், http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில், பல நேரங்களில் பதிவு செய்ய முடியவில்லை. இதன் பிரதான சர்வரில் பெரும்பாலான நேரங்களில் பிரச்னை இருக்கிறது. இதனால், மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். தடங்கல் இல்லாமல் பதிவு செய்யும் வகையில், வேலை வாய்ப்பு அலுவலக இணையதளத்தை பராமரிக்க வேண்டும். அப்போது தான் ஆன்-லைன் பதிவு முழு வெற்றி பெறும்.