உள்ளூர் செய்திகள்

நிலவில் வேலை கொடுக்க தயாராகுங்கள்: ‘சந்திரயான்’ அண்ணாதுரை

விழாவில், சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ‘இஸ்ரோ’ முன்னாள் இயக்குனர், விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் வழங்கினார். நிகழ்ச்சியில், விஞ்ஞானி அண்ணாதுரை பேசியதாவது:இந்திய மக்கள் பெருமிதம் படும்படியாக தற்போது சந்திரயான் இயங்கி வருகிறது. 2020ம் ஆண்டில் உலகத்தின் மகத்தான சக்தியாக இந்தியாவின் மக்கள் சக்தி இருக்கும். அதனால் தான் சந்திரயானை இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகளுக்கு அர்ப்பணித்தோம். இளைஞர்கள் தங்களது அறிவியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கான வாய்ப்புகள் உள்நாட்டிலேயே இருக்கின்றன. குறிப்பாக, வேலை தேடுபவர்களாக இல்லாமல், பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும். அடுத்தடுத்து பல சந்திரயான்கள் விண்ணில் ஏவப்படும். வருங்காலத்தில் இந்தியர்கள் நிலவில் கூட குடியேறலாம். எனவே, நிலவில் மற்றவர்களுக்கு வேலை கொடுக்க இளைஞர்கள் தயாராக இருங்கள். இவ்வாறு அண்ணாதுரை பேசினார். பல்கலைக்கழக துணைத் தலைவர் (நிர்வாகம்) வாசகம் வரவேற்றார். வேந்தர் ஏ.சி.சண்முகம், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரு சிம்கின், இணைவேந்தர் அருண்குமார் கலந்து கொண்டனர். சானியா ‘ஆப்சென்ட்’: இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி வரை அவர் வரவில்லை. அதற்கு பதிலாக, அவர் அனுப்பிய வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் சானியா, விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தும், விரைவில் தானே நேரில் வந்து பட்டம் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்