உயர்கல்வியில் மாற்றம் தேவை: பல்கலை துணைவேந்தர் கோரிக்கை
சென்னை: ‘வரும் காலங்களில் உயர்கல்வி நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருக்கும். போட்டிகளை சந்திக்க உயர்கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்’ என சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் ராமச்சந்திரன் கூறினார். சென்னை பல்கலைக் கழக யு.ஜி.சி., மற்றும் கல்வி அலுவலர் கல்லூரி சார்பில் ‘உயர்கல்வியை மாற்றி அமைத்தல்’ குறித்த கருத்தரங்கு சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. டிச. 17ம் தேதி நடந்த கருத்தரங்கிற்கு சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அப்போது அவர், பேசியதாவது:கல்வியின் திறன் குறைந்து வருகிறது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. உலகளவில் 100 சிறந்த பல்கலைக் கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், இந்திய பல்கலைக் கழகங்கள் அதிகளவில் இடம்பெறுவதில்லை. வரும் காலங்களில் உயர்கல்வி நிறுவனங்களிடையே போட்டி இருக்கும். இதுபோன்ற போட்டிகளை எதிர்காலத்தில் சந்திக்க கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக பல்கலைக் கழகங்களுக்கு, மாநில அரசுகளால் கிடைக்கும் மானியம் குறைவாகவே உள்ளது. அவர்கள் பள்ளி கல்வித்துறையை மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். எனவே, 90 சதவீதம் நாம்தான் திரட்ட வேண்டியது உள்ளது. தற்போது சுமைகளாக உள்ள பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். மாணவன் வாங்கும் மதிப்பெண்ணை வைத்தே முடிவு செய்கிறோம். அதைவிடுத்து, மதிப்பீடு செய்ய வேண்டும். உயர்கல்வியை 10 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என ஐந்தாண்டுகால திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 சதவீதத்தில் இருந்த உயர்கல்வி, தற்போது 2 சதவீதமாக குறைந்து விட்டது. இவ்வாறு துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசினார்.