உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்

ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர் சான்றிதழை பதிவு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அதிகளவில் குவிந்தனர். தமிழகம் முழுவதும் எல்லா மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் திக்குமுக்காடின. தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவ, மாணவியருக்கு ஜனவரி 18ம் தேதி அந்தந்த பயிற்சி மையத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர் ஜன. 19ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழை பதிவு செய்தனர். சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்குவதால் சான்றிதழை பதிவு செய்ய ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கடலூர்: திட்டக்குடி, தொழுதூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 18ம் தேதி இரவு முதல் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வரத்துவங்கினர். இரவு முழுவதும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெற்றோர்களுடன் கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்திருந்தனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,900 பேர் இடை நிலை ஆசிரியர் பயிற்சி பெற்று அவர்களில் 2,700 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. இவர்கள் அனைவரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய திருவள்ளூரில் குவிந்தனர். திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். முதலில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டுமென்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே காத்திருந்தனர். இதில் பெண்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் அலுவலகம் அமைந்துள்ள சாலையில் காத்திருந்தனர்.நெடுஞ்சாலையில் அதிகளவு மாணவர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதித்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அலுவலகம் திறந்த பின் காத்திருந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டது. ஒவ்வொரு 100 பேராக அலுவலகம் உள்ளே அழைத்து பதிவு செய்யப்பட்டனர். இது தவிர புதுப்பித்தல் உள்ளிட்ட மாணவ, மாணவியர்க்கு தனியாக பதிவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்