உள்ளூர் செய்திகள்

தொடர் அடாவடியால் இடமாற்றம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஆசிரியைகள்

கோபிசெட்டிபாளையம்: கலிங்கியம் அங்கன்வாடி மைய ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கோபி தாலுகா, கலிங்கியம் காந்தி நகரில், அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இம்மையத்தில் உள்ள ஜெயலட்சுமி, ராதா ஆகிய இரு ஆசிரியைகளுக்குள் பனிப்போர் நிலவுவதால், குழந்தைகளிடம் ஜாதி ரீதியாக நடந்து கொள்வதாகவும், முறையாக மையத்துக்கு வருவதில் என்பது உட்பட பல குற்றச்சாட்டு எழுந்தது. அக்கிராமத்தினர், இப்பிரச்னை குறித்து கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர். இதுபற்றி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவிகுமாரி தலைமையில், அதிகாரிகள் அடங்கிய குழுவினர், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அம்மையத்தில் ஆசிரியை ஜெயலட்சுமி மட்டும் பணியில் இருந்தார். மற்றொரு ஆசிரியை ராதா, விடுமுறையில் சென்றிருப்பது தெரியவந்தது. அங்கு, ஆசிரியை ராதா, வருகைப்பதிவேட்டில் தவறு செய்ததும், வேறு சில குறைபாடுகளும் கண்டறியப்பட்டது. தவிர, அக்கிராமத்தில் உள்ளவர்களிடம், அதிகாரிகள் விசாரித்து, அறிக்கையாக, கலெக்டரிடம் தாக்கல் செய்தனர். இப்பிரச்னைக்கு காரணம் குறித்தும், உளவுப்பிரிவு போலீஸாரும் விசாரித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பினர். இந்நிலையில், மாவட்ட திட்ட அலுவலர் தேவிகுமாரி கூறியதாவது: இங்குள்ள பிரச்னை குறித்து, கலெக்டரிடம் விளக்கினேன். தீண்டாமை கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா, என, என்னிடம் கேட்டறிந்தார். இருவரையும், வேறு மையத்துக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற பிரச்னையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக, இரு ஆசிரியைகள் தெரிவித்ததை, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். புகார் என வரும்போது, அரசு நடவடிக்கைக்கு தடையாக இருந்து, தற்கொலை என்ற அஸ்திரத்தை எடுத்து நாடகமாடினால், அந்த செயலுக்கு துறையோ அல்லது அதிகாரிகளோ பொறுப்பாகமாட்டோம் என போலீஸில் புகார் தெரிவிக்க உள்ளோம், என்றார். கலெக்டர் சண்முகம் கூறுகையில், "மையத்தில் பிரச்னை செய்த, இரு ஆசிரியைகளும், இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். உத்தரவை மதிக்காமல், மேலும் பிரச்னை செய்தால், அவர்கள் இருவரும் வரும் காலங்களில் கட்டாயம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்