சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
திருப்பூர்: சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் துவங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு, கடந்த 18ம் தேதி துவங்கியது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளிகளில் இத்தேர்வு நடந்து வருகிறது. 1,289 மாணவ, மாணவியர் எழுதி வருகின்றனர். பொதுத்தேர்வு முறையை பின்பற்றியே, உடனடி தேர்வு விடைத்தாள்களும் திருத்தப்படுகின்றன. ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு விடைத்தாள் பரிமாற்றம் செய்யப்பட்டு, அந்தந்த மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படுகின்றன. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.