உள்ளூர் செய்திகள்

தனியார் மாணவர் விடுதிகள் பாதுகாப்பை மேம்படுத்த கெடு

சேலம், ஆட்டையாம்பட்டி எல்லைக்கு உட்பட்ட அரியானூர், சின்ன சீரகாபாடி, பெரிய சீரகாபாடி ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியர் அதிக அளவில் தங்கி படித்து வருகின்றனர். தங்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு இன்மை காரணத்தால் அடிக்கடி திருட்டு, அந்நியர் பிரவேசம், இரவில், சந்தேக நபர் நடமாட்டம், மாணவ, மாணவியர் அறைகுறை ஆடைகளில் உலா வருதல் போன்ற காரணங்களால் அசாதாரண சூழல் நிலவுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. விதிமுறைக்கு மாறாக கூடுதல் வாடகை வசூலிக்கும் விடுதி உரிமையாளர்கள், பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்கவில்லை. மாணவ மாணவியரையும் கண்டுகொள்வதில்லை. வாடகை வருமானத்தை மட்டுமே குறி வைத்து விடுதி நடத்துவதால், போதையில் மாணவரிடையே அடிக்கடி மோதல் போக்கு, டூ-வீலர், லேப்-டாப், வாட்ச் உள்ளிட்டவை திருட்டு போவது வாடிக்கையாகி விட்டது. போலீஸாருக்கு சவால் விடும் இத்தகைய நடவடிக்கை, சட்டம்-ஒழுங்குக்கும் ஊறுவிளைக்கும் அபாய நிலை உருவாகி தற்போது பெரும் தலைவலியை போலீஸாருக்கு உருவாக்கி உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்காண, மாணவ மாணவியரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இக்கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமை வகித்தார். மாணவ மாணவியர் தங்கியுள்ள வீடு, மேன்ஷன், குடியிருப்பு மற்றும் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் 35 பேர் கலந்து கொண்டனர். அப்போது மாணவ, மாணவியரிடம் அதிக வாடகை வசூல் செய்வதற்கு ஏற்ப, அவர்களுக்கான பாதுகாப்பு வசதியும், முழுமையாக செய்து கொடுக்க வேண்டும்.தங்கும் இடத்தை சுற்றி பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். முறையான ஜன்னல் வசதி இருக்க வேண்டும். சிசி "டிவி" கேமரா பொருத்தி மாணவ மாணவியரின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். அவர்களை பற்றிய முழுவிவரத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சந்தேக நபர்கள் அடிக்கடி தேடி வருவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். சந்திக்க வரும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கண்டிப்பாக இரவு, பகல் நேரங்களில் வாட்ச்மேன் நியமித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அறைக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவ மாணவியரை தங்க அனுமதிக்க வேண்டும். அடிக்கடி வெளியில் சென்று நள்ளிரவில் விடுதிக்கு திரும்பும் மாணவ மாணவியர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். போதை பழக்கம், போதை வஸ்து பயன்படுத்துதல் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வோருக்கு மட்டுமே மாணவ மாணவியரை தங்க வைப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இல்லாத பட்சத்தில் விடுதியை பூட்டி "சீல்" வைக்கப்படும். ஒரு வாரத்துக்குள் விதிமுறைகளை கடைபிடிக்க கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்ட ரீதியாகவும் மேல் நடவடிக்கை தொடரப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். படிப்பு, தன் வேலை உண்டு என இல்லாமல் ஊர் சுற்றி வரும் மாணவ மாணவியருக்கு இதன் மூலம் கடிவாளம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்