உள்ளூர் செய்திகள்

வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடும் நபர்கள்

ஊட்டி: "மத்திய அரசின் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக சிலர் மோசடியில் ஈடுபடுவதாக வெளியான தகவலை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் பொதுமக்களை உஷார்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பொது மேலாளர் வேலுமயில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "அருவங்காடு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக அல்லது அதற்குண்டான அலுவலக நடவடிக்கைகளை செய்து கொடுப்பதாக, சில நபர்கள் பணம் பெறும் வகையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்" என கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கோல்கத்தாவில் உள்ள இந்திய தளவாட தொழிற்சாலைகள் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. தொழிலக நிர்வாகத்தில் நடைபெறும் அனைத்து நடைமுறைகளும், இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய தளவாட தொழிற்சாலைகள் குழுமத்தின் அலுவலக ஆணைகள் மற்றும் ஒப்புதலுக்கு இணங்க வெளிப்படையாக, நேர்மையான முறையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் சில நபர்கள் பணி நியமனம் குறித்து பல பொய்யான தகவல்களை கூறி வருவதோடு, மக்களிடம் இருந்து பணம் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய மோசடி நபர்களை பொதுமக்கள் நம்பி, ஏமாற வேண்டாம்; அவர்களுடன் எந்த பண பரிவர்த்தனையும் செய்து கொள்ள வேண்டாம். மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை எழுத்து மூலமாக, தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம்; தகவல் அளிப்பவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும். மோசடியில் ஈடுபடுவோர், புலனாய்வு துறை அல்லது காவல் துறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். மோசடி நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: * பொது மேலாளர், கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு. 0423-2231151, 0423-2230051. * கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு. 0423-2204944, 0423-2230975. * மத்திய புலனாய்வு துறை, சென்னை. 044-28273186, 044-28270992. இவ்வாறு பொது மேலாளர் வேலுமயில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்